அனுமதிபத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற லொறி விபத்து

-க.கிஷாந்தன்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற லொறியும், வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியதில் வேன் சாரதி காயம்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குயின்ஸ்பெரி தோட்ட பகுதியிலிருந்து நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பகுதிக்கு பசு மாடுகளை இறைச்சிக்காக கொண்டு சென்ற லொறியும், நாவலப்பிட்டியிலிருந்து குயின்ஸ்பெரி பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறியின் சாரதி மது போதையில் இருந்ததாகவும், பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த வேனுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸார் விபத்து குறித்து விசாணைகளை மேற்கொள்ளும் பொழுது அனுமதிபத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தின் பொழுது பசு மாடு ஒன்றுக்கு கால்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மேற்படி வேனும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

அதன்பின் பசு மாடுகளையும், அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியையும் பொலிஸார் கைப்பற்றியதோடு, லொறியின் சாரதியையும், உதவியாளரையும் கைது செய்த பொலிஸார் குறித்த இருவரையும் இன்று நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அனுமதிபத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற லொறி விபத்து அனுமதிபத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற லொறி விபத்து Reviewed by Vanni Express News on 4/26/2018 04:16:00 PM Rating: 5