வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு

-வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி
வன்னி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் உதவியுடன் சுதந்திரக் கட்சிக்கு தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகள்!!  வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு! 

வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், தவிசாளர் பதவியைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும், பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட ஒரு வாக்கு வித்தியாசத்தினால் வெற்றிபெற முடிந்தது.

செட்டிகுளம் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 02 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்ததால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிசாளர் பதவியைப் பெற முடிந்தது. அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியுடன் பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொண்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்த போதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 உறுப்பினர்களில், 02 பேர் நடுநிலை வகித்ததன் காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

எனினும், அதே பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதித் தவிசாளராகப் போட்டியிட்ட மகேந்திரனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கியதனால் அவர் வெற்றிபெற்றார்.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தௌபீக் பிரதித் தவிசாளரானார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்டது என்றும் வவுனியா நகர சபை உறுப்பினர்அப்துல் பாரி தெரிவித்தார்.
வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு Reviewed by Vanni Express News on 4/18/2018 09:40:00 PM Rating: 5