அடாவடி அரசியல் செய்வோர்க்கு, விழுமிய அரசியல் கசக்கும். றிப்கானுக்கு அஸ்மின் அய்யூப் பதிலடி

-என்.எம்.அப்துல்லாஹ்
உண்மைகளை, அறிவுபூர்வமாக முன்வைக்கின்றபோது அதற்கு அறிவுபூர்வமாக பதில் சொல்ல முடியாதவர்கள் எடக்கு முடக்காகக் கருத்துக்களை முன்வைப்பது வழமையானதே. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் முனைய நாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அவருடைய அறிக்கை குறித்து பதலளித்தார், அவர் மேலும் குறிப்பிடுகையில்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எனக்கும் இடையில் உள்ள உடன்படிக்கையைப் பகிரங்கப்படுத்துங்கள் என குறித்த கட்சியிடம் நான் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றேன், எனது பதவிக்காலம் குறித்து எவ்வித உடன்படிக்கையும் கிடையாது. எனக்கும் குறித்த கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை சார் முரண்பாடுகளே தவிர பதவிசார் முரண்பாடுகள் அல்ல என்பதை முதலில் தெரிவிப்பதோடு அந்த விடயத்தில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு றிப்கானுக்கு விழுமிய அரசியல் தெரியுமா என்பது கேள்விக்குறியேயாகும்.

வடக்கில் 4 சபைகளில் ஆட்சியதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்று பெருமையாக ஒரு சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள், ஆனால் அது அங்குள்ள மக்களின் விருப்புக்கு மாறானது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அது மாத்திரமல்ல அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையேயான உறவிலும் விரிசலையேறப்டுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதனை இன்னும் ஆணித்தரமாக சில விபரங்களோடு முன்வைப்பது சிறப்பானது என்று நினைக்கின்றேன்.

மன்னார் பிரதேச சபையின் ஆட்சியதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் கைப்பற்றியிருக்கின்றது. மன்னார் பிரதேச சபையின் கீழ் 11 வட்டாரங்கள் காணப்படுகின்றன அவற்றுள் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) பெற்றது. நான்கு வட்டாரங்களை வட்டாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஏனையவை விகிதாசாரப் பட்டியல் ஆசனங்களாகும். பெரும்பான்மை வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் விருப்புக்கு மாற்றமாகவே ஆட்சியமைப்பு இடம்பெற்றது.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 ஆசனங்களைக் கொண்டிருந்தது, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 ஆசனங்களைக் கொண்டிருந்து, ஏனையவை விகிதாசாரப்பட்டியல் ஆசனங்களாகும். பெரும்பான்மை ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் விருப்புக்கு மாற்றமாகவே அங்கும் ஆட்சியமைப்பு இடம்பெற்றது.

அதேபோன்று வவுனியா நகரசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பறித்தெடுப்பதிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாகச் செயற்பட்டது, றிப்கான் பதியுத்தீன் ஐக்கிய தேசியக் கட்சி பெண் உறுப்பினர் ஒருவரை கடத்திச் சென்று வைத்திருந்தமை தொடர்பிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு தமிழ் மக்களின் விருப்புக்கு மாற்றமாக முஸ்லிம் மக்களுக்கான கட்சி என்ற பெயரோடு செயற்படும் கட்சியின் செயற்பாடுகளை சாணக்கியமான அரசியல் செயற்பாடு என்று மெச்சுவதற்கு நான் ஒன்றும் நேர்மையற்றவன் அல்ல.

அமைச்சர் றிசாத்தினதும் அவர்களது சகாக்களினதும் செயற்பாடுகளினால் வடக்கிலே தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைந்திருப்பதும், இதன்மூலம் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படை உரிமைகள் சார்ந்த பல்வேறு சவால்கள் தீர்க்கபடாமல் இருப்பதும் கண்கூடு, அவ்வாறான நிலையில் உள்ளூராட்சி அதிகாரங்களை தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுக்கின்ற செயற்பாட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் துணைபோயிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் மேலும் சந்தேகங்களையும், பகைமையையும் வளர்க்குமே தவிர இரண்டு சமூகங்களுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்தாது.

வடக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது, 2002ம் ஆண்டிலே புலிகளினால் அது ஓரளவிற்கு திருத்தியமைக்கப்பட்டது, 2009 யுத்த நிறைவிற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காத்திரமான செயற்பாடுகளினால் அது மேலும் சீரமைக்கப்பட்டிருக்கின்றது. 


இவ்வாறான நிலையில் வடக்கில் முஸ்லிம் மக்கள் மிகவும் சொற்பமாகவே வாழ்கின்றார்கள், இந்நிலையில் வடக்கில் முஸ்லிம் மக்களே வாழாத பிரதேசங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆட்சியதிகாரங்களை முறைகேடாகப் பெற்றுக்கொண்டால் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் மீது கொண்டிருக்கும் சந்தேகம் வலுப்பெறும், அது மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதற்கான கருவியாக முஸ்லிம் அமைச்சர்களை, அரசியல்வாதிகளைப் பயன்படுத்துவது மேலும் உறுதிசெய்யப்படும். இதனை புரிந்துகொள்ளும் ஆற்றல் றிப்கான் போன்றவர்களுக்கு இருக்கும் என நான் எண்ணவில்லை.

அது மாத்திரமல்ல வடக்கிலே தமிழ் முஸ்லிம் உறவு சீர் செய்யப்படாவிட்டால் முஸ்லிம் மக்களின் இருப்பு மேலும் மேலும் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை நாம் மற்ந்துவிடக்கூடாது, உதாரணத்திற்கு தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற மாகாணசபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணயத்திலே வடக்கு மாகாணத்திலே ஒரு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினரையேனும் பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கே தொகுதிப் பிரிப்புகள் இடம்பெற்றுள்ளன, அப்படியாயின் முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலம் எப்படியானதாகவிருக்கும்? இதனை நாம் சீர்செய்வதற்கு வடக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுகளும் தமிழ் மக்களுக்கு சந்தேகத்தை உருவாக்கும் வகையில், அல்லது தமிழ் மக்களின் விருப்புக்கு எதிரான அமைப்பில் இருப்பது ஆரோக்கியமானதல்ல

ஆனால் அடாவடி அரசியல் செய்ய நினைப்போர் அங்கும் காசுக்கு வாக்குகளைப் பொறுக்கி ஜனநாயகத்தை விலைக்கு வாங்கி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துவிடலாம் என்றும் எண்ணக்கூடும். இவை சின்னதனமான செயற்பாடுகளேயன்றி மக்கள் நலன்சார்ந்தவையல்ல. நாம் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், காசுக்கு வாக்கு வாங்கும் நடைமுறையை அரசியல்வாதிகள் அறிமுகம் செய்தால், மக்களோ புத்திசாலிகள், யார் கூடுதல் காசு தருகின்றானோ அவனுக்கே வாக்கு என்று தீர்மானித்தால் இப்போது காசுகொடுப்போரை விஞ்சும் இன்னுமொரு வியாபாரி வருவதற்கு அதிக நேரம் எடுக்காது.

எனவே வடக்கிலே முஸ்லிம் மக்கள் வாழாத, அல்லது மிகவும் செற்ப எண்ணிக்கையிலே வாழ்கின்ற பிரதேசங்களில் ஒரு சிலரை விலைக்கு வாங்கி, அவர்களை தமிழ் மக்களின் பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து பிரித்தெடுத்து, அவர்களை தேர்தலில் களமிறக்கி, அதிக பணத்தை செலவு செய்து, வாக்குகளையும் விலைகொடுத்து வாங்கி, பெரும்பான்மையாக வெற்றிபெற்றவர்களை புறம்தள்ளி சிறு கட்சிகளின் உறுப்பினர்களையும் விலைகொடுத்து வாங்கி ஆட்சியமைப்பதில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையையே ஏற்படுத்தும், உணர்ச்சி அரசியலை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அறிவார்ந்தமாக சிந்தித்தால் இதையாவது றிப்கான் புரிந்துகொள்வார் என எண்ணுகின்றேன்.

என்றும் குறிப்பிட்டுள்ளார்
அடாவடி அரசியல் செய்வோர்க்கு, விழுமிய அரசியல் கசக்கும். றிப்கானுக்கு அஸ்மின் அய்யூப் பதிலடி அடாவடி அரசியல் செய்வோர்க்கு, விழுமிய அரசியல் கசக்கும். றிப்கானுக்கு அஸ்மின் அய்யூப் பதிலடி Reviewed by Vanni Express News on 4/21/2018 10:29:00 PM Rating: 5