ஐபிஎல் - திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐ.பி.எல். தொடரின் 21 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. நாணய சுழற்சியை வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

அதன்படி தொடக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் களமிறங்கினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் லீவிஸ் விக்கெட்டை எடுத்தார். 

அடுத்து இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் எதிரணியினர் திணறினர். 

மும்பை அணி 130 ஓட்டங்கள் எடுத்தபோது இஷான் கிஷான் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சூர்ய குமார் யாதவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய தலைவர் ரோகித் சர்மா உள்பட மும்பை வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 72, இஷான் கிஷான் 58 ஓட்டங்கள் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டும், குல்கர்னி 2 விக்கெட்டும் எத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டு இழப்புக்கு 167 ஓட்டங்கள் குவித்தது. 

பின்னர் 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். திரிபாதி 9 ஓட்டங்களிலும், ரகானே 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் சஞ்சு சாம்சன் உடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். ஸ்டோக்ஸ் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார். 

சாம்சன் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாம்சன் அரைசதம் கடந்தார். 17வது ஓவரை வீசிய பும்ரா சாம்சன், பட்லர் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்க செய்தார். சாம்சன் 39 பந்தில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கிளாசன், ஜோப்ரா ஆர்சர் ஆகியோர் களமிறங்கினர். 

கிளாசன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் கவுதம் அதிரடியாக விளையாடினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

கிருஷ்ணப்பா கவுதம் 11 பந்தில் 33 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
ஐபிஎல் - திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் - திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! Reviewed by Vanni Express News on 4/23/2018 11:23:00 PM Rating: 5