200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம்  சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு நெடா (NEDA)வின் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப்போவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

-பரீட் இஸ்பான்

அடுத்த வருடம் 200 பட்டதாரி மாணவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக்கொடுப்பனவை தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (NEDA) முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்அமைச்சர் றிஷாட் பதியுதீனின்வழிகாட்டலில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டக் கொடுப்னவு நிகழ்வு கைத்தொழில் வர்த்தகஅமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்திட்டம் இவ்வாண்டும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சுமார் 3 ஆண்டுகளாக பல்கலைக்கழக மாணவர்களை சுயமாக தொழில் ரீதியாக ஊக்குவிக்கும்இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் முயற்சி ஆர்வத்தை அடிப்படையாகக்கொண்டு அதனை ஆய்வுக்குட்படுத்தி திட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

இம்முறை தெரிவுசெய்யப்பட்ட 32 மாணவர்களுக்கு இந்த உதவுதொகை தலா 150,000.00 ரூபா வீதம் அமைச்சர் றிஷாட் பதியுதீனால்வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

நாம் இந்த நாட்டில் தரம் ஒன்று தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியைக் கற்கின்றோம். பட்டப்படிப்பினை நிறைவு செய்த பின்னர் தொழில் ரீதியாக அரச தொழிலைத் தான் செய்ய வேண்டும். என்ற எண்ணப்பாட்டில் பலர் தங்களது எதிர்காலத்தை பாழாக்கின்றனர். இலங்கையில் படித்துவிட்டு வேலையில்லாப் பட்டதாரிகள் எண்ணற்றோர்இருக்கின்றனர்.

பட்டதாரிகள் சொந்தமாக தொழில் செய்து சமூகத்தில் முன்மாதிரியாகக் திகழும் வகையில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு வேலைத்திட்டமாகவே இவ்வாறான எண்ணக்கருவொன்றை எமது அமைச்சு கடந்த 3 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. அடுத்த வருடம் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அடுத்த ஆண்டு200 பட்டதாரி மாணவர்களுக்கு தொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்க முடிவு செய்துள்ளோம்.

எல்லோரும் அரச தொழில்தான் செய்ய வேண்டும் என்றமனோபாவம் நமது நாட்டில் அதிகரித்து வருகின்றது. இந்த நடைமுறையை மாற்றி புதிய சிந்தனைகளுடன் சுயமாக தொழில் செய்து நிறைவாகவும் வளமாகவம் வாழ நமது எதிர்கால சந்ததியினர் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கு முன்மாதிரியாக பல்கலைக்கழக மாணவர்கள் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஒமர் காமில், இன்சீ சீமெந்து நிறுவன பிரதித் தலைவர் ஜேன் குனிக், அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜூதீன், அமைச்சரின் ஆலோசகர்களான றோய், அசித்த பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு 200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு Reviewed by Vanni Express News on 4/27/2018 05:32:00 PM Rating: 5