சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில்

சிலாபம் - குருநாகல் பிரதான வீதியின் முன்னேஸ்வரம் பகுதியில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்தில் விலத்தவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்கொட்டுவை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சிறிய ரக லொறி ஒன்று, வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக லொறி ஒன்று பாதையின் குறுக்காக சென்ற மாடு ஒன்றுடன் மோதி பின்னர் எதிரில் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விபத்தில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன், மாடுகளின் நடமாட்டத்தினால் கடந்த காலங்களில் சிலாபம் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். 

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில் சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் பலி - மூவர் வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 5/15/2018 04:32:00 PM Rating: 5