ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக விபத்து - ஒருவர் பலி

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின் ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். 

நேற்று (20) மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஓட்டமாவடி மீன் சந்தையில் இருந்து ஏறாவூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் வாழைச்சேனை ஹைறாத் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி ஏ.எல்.எம்.ஹனீபா என்பவரே உயிரிழந்துள்ளதுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மஞ்சுள என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார். 
ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக விபத்து - ஒருவர் பலி ஓட்டமாவடி பஸார் பள்ளிவாயலுக்கு முன்பாக விபத்து - ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 5/21/2018 01:23:00 PM Rating: 5