03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தை கைது

கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 16, 14 மற்றும் 13 வயதுடைய 03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தன்னை 12 வயதில் இருந்து தனது தந்தை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், தனது இரண்டு தங்கைகளையும் அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் மூத்த மகளினால் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. 

ஆபாச படங்களை காண்பித்து தங்கள் மூவரையும் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கவைத்து தனது தந்தை மற்றும் தனது சிறிய தந்தையும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டதாகவும், இதுதொடர்பில் பல தடவைகள் தாயிடம் கூறிய போதும் அவர் அது தொடர்பில் எவ்வித கரிசணையும் எடுக்கவில்லை என்றும் மூத்த மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தால் தானும் தனது சகோதரிகள் இருவரும் வீட்டில் இருந்து தப்பித்து கொழும்புக்கு தொழில் தேடி வந்தவேளை, கொழும்பு கோட்டை பொலிஸாரினால் தாம் கைது செய்யப்பட்டு கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மூத்த மகள் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். 

கொழும்பு கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், தந்தை மற்றும் சிறிய தந்தையின் தொல்லைகளை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் வேலை ஒன்றை தேடி கொழும்பிற்கு வந்ததாக குறித்த சிறுமிகளால் தெரிவிக்கப்பட்டதாக கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் மூவரையும் நுவரேலியா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் முன்னிலையில் அனுமதித்துள்ளதாகவும், குறித்த சிறுமிகளின் தாயிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 47 மற்றும் 50 வயதுடைய தந்தை மற்றும் சிறிய தந்தையை நுவரேலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தை கைது 03 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறிய தந்தை கைது Reviewed by Vanni Express News on 5/04/2018 05:06:00 PM Rating: 5