மரபுகளும் உரிமைகளும்!

-எஸ். ஹமீத்

மரபு சார்ந்தவை ( (Heredity) அல்லது பாரம்பரியம் (Tradition) எனப்படுவது முன்னோர்கள் வழி நின்று சந்ததிகள் பின்பற்றி வருகின்ற பழக்க வழக்கங்களாகும். இது செயற்கையானது.

இந்தக் கருத்தோடு உடல்ரீதியாகச் சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்ற இயற்கையான மரபணுக்கள் (Genes) என்பதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இது இயற்கையானது.

செயற்கையும் இயற்கையும் வேறு வேறானவை, எதிரும் புதிருமானவை என்பதை இன்னும் அழுத்தமாகவும், ஆழமாகவும்  புரிந்து கொள்வது இக்காலகட்டத்தில் மிக அவசியம்.

இயற்கையை மாற்ற முடியாது. ஆனால் செயற்கையை மாற்றலாம். அவ்வாறே மரபணுக்கள் என்பதைப் புதிதாக உருவாக்கவோ அல்லது வேறுவிதமாக மாற்றியமைக்கவோ முடியாது. ஆனால், மரபுகளையும் பாரம்பரியங்களையும் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

மரபுகள், பாரம்பரிய செயற்பாடுகள் என்பவற்றைச் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்றும் கொள்ளலாம். திருப்தி, மகிழ்ச்சி, பாதுகாப்பு, நன்மை என்பவற்றைத் தருபவை எனும் நம்பிக்கைகளினூடாக இந்த மரபுகள், பாரம்பரியங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் முன்னைய மனிதர்களினால் உண்டாக்கப்பட்டுப் பின்னைய சந்ததிகளுக்கும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

இவற்றுள் பல மூட நம்பிக்கைகள் என்னும் முத்திரை குத்தப்பட்டுக் காலப் போக்கில் கைவிடப்பட்டிருக்கின்றன. மேலும் சில சட்டத்திற்கு முரணானவையென்று அறிவிக்கப்பட்டு, அவற்றைத் தொடர்வோரை வன்மையான தண்டனைக்குள்ளாக்குகின்றன.

உதாரணத்திற்கு, கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டையேறித் தீயில் எரிந்து சாகவேண்டுமென்ற மரபை இங்கு சுட்டிக் காட்டலாம். பலகாலங்களாக மரபு, பாரம்பரியம், சடங்கு, சம்பிரதாயம் என்ற ரீதியில் சில சமூகங்களினால் பின்பற்றப்பட்டு வந்த இந்தக் காட்டுமிராண்டித்தனமான செய்கை இன்று கைவிடப்பட்டுள்ளது. மீறுவோர் கடுமையான தண்டனைக்குள்ளாவர்.

அவ்வாறே, கணவன் இறந்த பின்னர் மனைவி வெள்ளைப் புடவையில், வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டுமெனும் மரபுமாகும். ஆனாலும், ஒரு மனைவி விரும்பியணிந்தாலேயொழிய, அவளை வெண்புடவை கட்டுமாறு யாரும் இன்று வற்புறுத்த முடியாது. அவ்வாறே அவள் வெளியில் நடமாடக் கூடாதென யாராலும் கட்டளையிடவும்  முடியாது. மீறி வற்புறுத்தினால், கட்டளையிட்டால் அவை குற்றங்களாகும். தண்டனைகளுமுண்டு.

சட்டங்களினால் தடைசெய்யப்படாத பல மரபுகளை அறிவார்ந்த சமூகம் தானாகக் கைவிட்டதுமுண்டு.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் வாசற்படி தாண்டக் கூடாதெனும் மரபும்-

சாதியில் தாழ்ந்தவன் தண்ணீர் கேட்டால் தனியான சிரட்டையில் கொடுக்கும் பண்பாடும்-

அம்மை நோய் வந்தால் ஆஸ்பத்திரியில் மருந்தெடுக்கக் கூடாது எனும் சம்பிரதாயமும்-

அறிவு பிறழ்ந்தவர்களுக்குச் செய்யும் அண்ணாவிச் சடங்குகளும்-

பெண் பிள்ளைகளை வதைக்கும்  கத்னா எனப்படும் விருத்தசேதன கலாச்சாரங்களும்- என எல்லாமே தற்காலத்தில் அருகிவிட்டன.

இவ்விதமே காலாகாலமாக உலக அரங்குகள் பலவும் மிக்க கண்டிப்போடு பின்பற்றி வந்த மரபுகளும் தனியான கலாச்சாரங்களும் மற்றவர்களின்  உரிமைகளையும் சுதந்திரத்தையும் மதிக்கும் பொருட்டு கைவிடப்பட்டுள்ளன.

மிக அண்மித்த உதாரணமாக, ஒலிம்பிக் போட்டிகளில் இவ்விதம்தான் ஆடையணிய வேண்டுமெனும் மரபு ரீதியான கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டு, அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிந்து கொள்ளலாமென்ற உரிமைகள் வழங்கப்பட்டுவிட்டன. உடல் முழுக்க மறைத்த உடைகளுடன்-தலையில் ஹிஜாபோடு பெண்கள் இன்று ஒலிம்பிக் மைதானத்தின் விளையாட்டரங்குகளில் பங்குபற்றித்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்...

மரபு-பாரம்பரியம்-கலாசாரம் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களின் உரிமையை, சுதந்திரத்தை மதிக்காமல் அவற்றைப்  பறிக்கின்றவர்களாக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் சிலர் வாழ்வது வெட்கப்பட வேண்டியதும் வேதனைப்பட வேண்டியதுமாகும்.

இறுதியாக....

எனது மரபு உனது உரிமைக்குக் குறுக்கே நிற்குமாயின் நான் எனது மரபை விட்டுவிடுவேன்.

அதுபோல், உனது மரபு எனது உரிமைக்குக் குறுக்கே நிற்குமாயின் நீ உனது மரபை விட்டுவிட வேண்டும்.

உனது மரபுக்காக எனது உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன்.

பறிக்கலாமென நீ நினைத்தால் அது உந்தன் பகற்கனவு!
மரபுகளும் உரிமைகளும்! மரபுகளும் உரிமைகளும்! Reviewed by Vanni Express News on 5/01/2018 06:10:00 PM Rating: 5