முந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா! யார் இவர் ?

-எஸ். ஹமீத்

முந்தாநாள்  (18-05-2018) முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தன. அந்நிகழ்வின் போது ஓர் ஓரமாக மௌன விரதம் அனுஷ்டித்தபடி அழுது கொண்டிருந்த பசீர் காக்கா பற்றித் தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

பசீர் காக்கா புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனோடு ஒரே சைக்கிளில் பயணம் செய்து அந்த அமைப்பைக் கட்டமைக்கப் பாடுபட்டவர். பிரபாகரனோடு ஒன்றாய் உண்டு, உறங்கியவர். போராளியாக இருந்து பல களங்களில் நின்று போர் செய்தவர். ஒரு மாவீரரின் தந்தை. முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஒரு பிள்ளையைப் பறி கொடுத்தவர்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பூசா, வெலிக்கடை, மகசின், அனுராதபுரம்  சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர் பசீர் காக்கா.

வழக்கம் போல இம்முறையும் பசீர் காக்கா முள்ளிவாய்க்காலுக்கு முதல் நாளே சென்று, ஏற்பாடுகளில் பூரண பங்கெடுத்தார். மறுநாள், ஓர் ஓரமாக உட்கார்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அஞ்சலி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வெளியேறிய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தற்செயலாக பசீர் காக்காவைக் கண்டார். அவரை நோக்கிச் சென்று அவரைக் கட்டித் தழுவி, தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இணையத் தளங்கள் பலவும் பசீர் காக்காவின் செய்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஆனாலும், பல செய்திகளில் பசீர் காக்காவின் உண்மையான பெயரோ, ஊரோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

பெயரைப் பார்த்து பசீர் காக்கா ஒரு முஸ்லிம் என்று பலரும் நினைத்திருக்கலாம். அதுபற்றிய விமர்சனங்களை முன்வைத்திருக்கலாம். சிங்கள இனவாதிகள் கூட மேலோட்டமாக அர்த்த்தப்படுத்திக் கொண்டு கருத்துகளைப் பகிரலாம்.

உண்மையில் பசீர் காக்கா அல்லது காக்கா அண்ணை எனப்படுபவர் ஒரு முஸ்லிம் அல்ல. அவரது சொந்தப் பெயர் முத்துக்குமார் மனோகர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

ஒரு தெளிவுக்காகவே இந்தச் செய்தி!
முந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா! யார் இவர் ? முந்தாநேற்று முள்ளிவாய்க்காலில் அழுத பசீர் காக்கா! யார் இவர் ? Reviewed by Vanni Express News on 5/21/2018 02:00:00 PM Rating: 5