அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும்

-எஸ். ஹமீத்

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று வெற்றி வாகை சூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்தப் பதவி புத்தளத்தைச் சேர்ந்த எம்.எச்.எம். நவவி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

வடமாகாண முஸ்லிம் மக்கள் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட 1990ம்  ஆண்டு தொடக்கம் பல்லாயிரக்கணக்கான அம்மக்களின் இருப்புக்கும் வளத்திற்கும் அர்ப்பணிப்புகளோடு தியாகங்களைச் செய்த புத்தளம் மக்களுக்கான ஒரு நன்றிக்கடனாகவும், புத்தளம்  தொடர்ச்சியாக இழந்துவந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்யும் வகையிலும் நவவி ஹாஜியாருக்குத் தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார். ஆனாலும் அது ஒரு வருட காலத்திற்குத்தான் என்று அப்போது பேசப்பட்டது.

ஆனால், புத்தளத்தின் தேவையையும் நவவி ஹாஜியாரின் சேவையையும் கருதி அப்பதவி நீடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட  இரண்டு வருடங்களும் ஒன்பது மாதங்களும் நவவி ஹாஜியார் பதவியிலிருந்து, அமானிதமாகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அந்தப் பதவியை இன்று திருப்பிக் கையளித்திருக்கிறார்.

கடந்த காலங்களில் தேசியப்பட்டியலில் எம்.பி.யானவர்கள் கட்சி மாறி, பிரதியமைச்சர் பதவிகளை பெற்றுத் தன்னை நம்பியோருக்குத் துரோகங்கள் செய்த வரலாறுகள் நமது முஸ்லிம் அரசியலில் அதிகமதிகம். அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை அபகரித்துத் தன்னை மட்டும் வளர்த்து வயிறு நிரப்பிய அந்த நபர்களுக்கு மத்தியில் நவவி ஹாஜியார் போற்றத்தக்க முன்மாதிரியாகவிருந்து தனக்கும் தனது மண்ணுக்கும் இன்று பெருமை சேர்த்திருக்கிறார்.

அது ஒருபுறமிருக்க, இப்போது காலியாகவுள்ள அந்த எம்.பி. பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகின்றார் என்பது இலங்கை அரசியலில் மில்லியன் டாலர் கேள்வியாக இன்று உருவெடுத்துள்ளது. என்ன நடக்கப் போகின்றது என்பதை எல்லாக் கட்சியினரும் மூச்சு வாங்க அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைக்கு இது சோதனையாகவும் சவாலாகவும் இருக்குமென்று நாம் யூகிக்கலாம்.

மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற தனது உடன்பிறந்த  தம்பியான றிப்கான் பதியுதீனை மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைத்து அப்பதவியை முசலி மண்ணின் அலிகான் ஷரீபுக்கு  வழங்கி அழகு பார்த்த தலைவர் ரிசாத் பதியுதீன். தலைமை கேட்டுக் கொண்டதனால் பதவியைத் தியாகம் செய்துவிட்டு இன்றும் தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருப்பவர் றிப்கான் பதியுதீன். (இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணனான மனோ கணேசனுக்குத் துரோகமிழைத்துவிட்டு கட்சி மாறிப் பதவி பெற்ற பிரபா கணேசன் ஏனோ ஞாபகத்துக்கு வருகிறார்.)

ஆக, தனக்கென எந்தச் சுயநல சிந்தனைகளுமின்றி, சொந்த உறவுகளுக்கப்பால் நின்று மக்களின் நலன்களுக்கும் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் ஆளுமை மிக்க தலைமைத்துவமான ரிசாத் பதியுதீன், தற்போதைய தேசியப்பட்டியல் நியமன விவகாரத்திலும் சரியான முடிவுகளை மேற்கொள்வாரென்று நிச்சயமாக நம்பலாம்.

தேசியப்பட்டியல் எம்.பி. பதவியைப் பெற்றுக் கொள்ளப் போகின்றவர் யாராக இருந்தாலும் இறுதி வரை கட்சிக்கும் தலைமைக்கும் சமூகத்திற்கும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் அவர் செயற்பட வேண்டும். கிடைத்த பதவியை அற்ப சொற்ப இலாபங்களுக்காக  விற்றுவிடாமல், கொள்கைப் பிடிப்புடன் அல்லாஹ்வுக்குப் பயந்தவராக இந்தத் தேசிய பட்டியல் எம்.பி. பதவியைப் பெறப்போகின்றவர்  இயங்குதல் வேண்டும்.

எனது கணிப்புச் சரியானால், இந்தத் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி சம்மாந்துறையைச் சேர்ந்த டாக்டர் இஸ்மாயில் VC அவர்களுக்கே வழங்கப்படலாம். ஆனாலும் இந்தப் பதவியைப் பெரும் அவரோ அல்லது மற்றொருவரோ, யாராகினும் இது மக்களினதும் மக்கள் காங்கிரஸ் கட்சியினதும் அதன் தலைமையினதும் அமானிதம் என்பதை ஞாபகத்திற் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்காக அந்த அமானிதத்தைப் பொறுப்போடு பாதுகாக்க வேண்டும். 

அப்பதவியைக் கொண்டு தலைமைக்கும் கட்சிக்கும்  சமூகத்திற்கும் உச்சபட்ச சேவைகளை வழங்க வேண்டும். துரோகத்தனங்களையோ, துஷ்பிரயோகங்களையோ மேற்கொள்ளாது கடைசிவரை தமது நேர்மையையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இதுவே கட்சி அபிமானிகளினதும் மக்களினதும் இன்றைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்!
அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும் அமானிதமான அ.இ.ம.கா. தேசியப்பட்டியல் எம்.பி பதவியும் மக்களின் எதிர்பார்ப்பும் Reviewed by Vanni Express News on 5/24/2018 10:48:00 PM Rating: 5