ஐ.பி.எல் நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் - ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு!

ஐ.பி.எல்-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் பட்லர் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். 

11-வது ஐ.பி.எல் சீசனில் நாம் எதிர்பார்க்காத பல வீரர்கள் தங்களது அதிரடியால் கவர்ந்து வருகின்றனர். அந்த வீரர்களில் வெளிநாட்டு இறக்குமதியான இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரும் ஒருவர். 

இவர் இந்த சீசனில் ரூ.4.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 12 போட்டிகளில் 509 ரன் அடித்திருக்கும் பட்லரின் சராசரி 56.56, ஸ்ட்ரைக் ரேட் 153.78 ஆக உள்ளது. 

மேலும், தொடர்ந்து ஐந்து முறை அரைசதம் அடித்து, சேவாக்கின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார். இது தவிர, இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக பட்லர் விளங்கினார். 

இதனால் பலரது கவனத்தையும் பெற்ற பட்லர், தேசிய அணியின் கவனத்தை பெறவும் தவறவில்லை. 

வருகிற மே 24ம் தேதி முதல் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

இதில் ஜோஸ் பட்லர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு 18 மாதங்களுக்கு பிறகு பட்லர் திரும்ப இருக்கிறார். 

மே 19ம் தேதி ராஜஸ்தான், பெங்களூருவை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், மே 17ம் தேதி பட்லர் இங்கிலாந்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல் நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் - ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு! ஐ.பி.எல் நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் - ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு! Reviewed by Vanni Express News on 5/15/2018 11:48:00 PM Rating: 5