கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் - சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி திரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது குவாலிபையர் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் சஹா ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி, ஆரம்ப விக்கட்டுக்காக 56 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

தவான் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களம் இறங்கிய அணித்தலைவர் வில்லியம்ஸன் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டனர்.

தொடர்ந்து சகிப் அல் ஹசன் 28 ஓட்டங்களுடனும், தீபக் ஹுடா 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, யூசுப் பதான் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதன்படி 18.1 ஓவர்களில் ஹைதராபாத் அணி 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் தடுமாறியது. எனினும் அடுத்து களமிறங்கிய சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை தினறடித்தார்.

வெறும் 10 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட இவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொல்கத்தா அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில், குல்டீப் யாதவ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

கடினமான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் அதிரடியை வெளிப்படுத்தியது. சுனில் நரைன் 13 பந்துகளுக்கு 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 3.2 ஓவர்களில் 40 ஓட்டங்களை எட்டியது.

தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய கிரிஸ் லின் 48 ஓட்டங்களையும், நிதிஷ் ரானா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க கொல்கத்தா அணி வெற்றிவாய்ப்பை நெருங்கியது.

எனினும் அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் மற்றும் உத்தப்பா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கட்டுகளை பறிகொடுக்க, கொல்கத்தா அணி தடுமாறியது.

இறுதிவரை போராடிய சுப்மான் கில் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரஷீட் கான் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், சித்தார்த் கௌல் மற்றும் பிராத்வைட் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்ற்றிக்கு வழிவகுத்தனர்.

இதன்படி இந்த போட்டியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி நாளைய தினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், சென்னை அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் - சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் - சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் Reviewed by Vanni Express News on 5/26/2018 06:03:00 PM Rating: 5