ரஷீட் கான் தொடர்பில் சச்சின் கூறியது என்ன ?

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் வெளிவருவார் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

எனினும் தற்போது ரஷீட் கான் என்ற இளம் சுழற்பந்து வீச்சாளர், சர்வதேச கிரிக்கெட்டை தன்பக்கம் திருப்பியுள்ளார்.

இருபதுக்கு-20 தொடரை பொருத்தவரையில் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷீட் கான் அணியின் வெற்றியில் மிகப்பெரிய பங்காற்றுகிறார்.

அதிலும் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான இரண்டாவது குவாலிபையர் போட்டியின் வெற்றிக்கு முழு காரணமும் ரஷீட் கான் என்றால் அது மிகையாகாது.

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி துடுப்பாட்டத்தில் தடுமாறியது. குறித்த நேரத்தில் களமிறங்கிய ரஷீட் கான் வெறும் 10 பந்துகளுக்கு 34 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்த்தினார்.

பின்னர் பந்து வீச்சில் 19 ஓட்டங்களை கொடுத்து முக்கியமான மூன்று விக்கட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டு பிடியெடுப்புகள் மற்றும் ஒரு ரன்-அவுட் என போட்டியின் வெற்றியை ஹைதராபாத் அணி பக்கம் திருப்பினார்.

இந்நிலையில் இவரது சகலதுறை திறமையை கண்டு உலகின் முன்னணி வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதில் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் ரஷீட் கானை வாழ்த்தியுள்ளார்.

டெண்டுல்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ரஷீட் கான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.  இருபதுக்கு-20 கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சளார் ரஷீட் கான்தான் என கூறமுடியும். அதுமாத்திரமின்றி அவரிடம் சிறந்த துடுப்பாட்ட திறனும் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
ரஷீட் கான் தொடர்பில் சச்சின் கூறியது என்ன ? ரஷீட் கான் தொடர்பில் சச்சின் கூறியது என்ன ? Reviewed by Vanni Express News on 5/27/2018 12:47:00 AM Rating: 5