தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் தடியடி நடத்தி கலைத்தனர். 

இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று பிற்பகலில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். பொலிஸாரும் தடியடி நடத்தினர். 

ஒரு கட்டத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இன்று செல்வசேகர் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 5/24/2018 01:18:00 PM Rating: 5