யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் - பல கட்சிகள் ஆதரவு

-பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம்  ஒன்றை தயார் படுத்தவுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் இ.ஆர்னோல்ட் தனது  அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு அறிக்கையிடுவதற்காக 14 இணைப்பாளர்களை நியமித்திருந்தார்.

இந்த இணைப்பாளர் நியமனம் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும்   எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.எனது பகுதி மக்களும் எனக்கு ஒரு கடிதம் வாயிலாக இணைப்பாளரின்(13ஆம் வட்டாரம்) அட்டகாசம் குறித்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்ததாக வடக்கு மாகாண சபை முதல்வர் சி.வி விக்னேஸ்வரனுக்கும்  யாழ் மாநகர சபையில் பெரும்பான்மை ஆசனங்களை வைத்துள்ள அனைத்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களும்  குறித்த இணைப்பாளர்களின் நியமனம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளனர்.

 ஆனால்  இந்த விடயம் சம்பந்தமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் 8 ஆம் திகதி முதல்வரின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானம்  ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளேன்.

இதற்கு முதல்வரை தெரிவு செய்தது போன்று இரகசிய வாக்கெடுப்பிற்கு விடாது பகிரங்கமாகவே நாங்கள் முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிராக வாக்களித்து குறித்த நியமன விடயத்தை தோற்கடிப்போம்.இந்த இணைப்பாளர் நியமனம் தொடர்பாக முதல்வரை சிம்மாசனத்தில் அமர்த்திய நான் உட்பட பல கட்சி உறுப்பினர்கள் விரக்தியில் உள்ளோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் இருக்கின்ற போது முதல்வர் இவ்வாறான கேவலமான செயற்பாட்டை மேற்கொண்டமை எமக்கு செய்த துரோகமாகவே பார்க்கின்றோம்.

ஏனெனில் முதல்வர் எங்களால் தெரிவு செய்யப்பட்டு சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கன்னி உரையில் குறிப்பாக அரசியல் பேதங்களை மறந்து சகல அரசியல்கட்சியுடனும் இணைந்து மாநகர சபை செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லவுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இங்கு தற்போது நடப்பது வேடிக்கையாக உள்ளது.மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் இருக்கின்றோம்.இங்கு முதல்வரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டு திரிபவர்கள் தாம் மக்களின் பிரதிநிதி என கூறி எம்மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இது தவிர இவ்வாறான இணைப்பாளர்களாக தெரிவானவர்கள் சிலர் சட்டவிரோத தொழில்களை மேற்கொண்டவர்கள் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு மக்களால் தோற்கடிக்கபட்ட ஒரு கட்சியின் குழுவினராவர்.

இவர்கள் இவ்வாறான எமது மக்களை ஏமாற்றி எம்மை புறந்தள்ள முயல்கின்றனர்.இதனை சும்மா கைகட்டி பார்ப்பதற்கு நாங்கள் தயாரில்லை.எனவே முதல்வரின தவறான அணுகுமுறைக்கு தக்க பாடத்தை நாம் எதிர்வரும் காலங்களில் சொல்லிக்கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை யாழ் மாநகர சபை முதல்வரின் இணைப்பாளர் விடயம் தொடர்பில் முதலவமைச்சரின் கவனத்திற்கு தாம் கொண்டு சென்ற நிலையில் இதுவரை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமது கடிதத்திற்கு பதில் ஏதுவும் வழங்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி மணிவண்ணன் குறிப்பிட்டார்.

அவர் தனது கருத்தில் 

இது தொடர்பில் முதலமைச்சர் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.முதல்வருக்கு அவர் கூறிக்கொண்டு திரிகின்ற நிறைவேற்று அதிகாரம் என்ற ஒன்று இல்லை.என்றாலும் எமது மாநகர சபை சட்டத்தில் நம்பிக்கை இல்லாப்பிரேரணை சட்டப்பிரகாரம் இல்லை என்ற காரணத்தினால் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் எம்மை தொடர்பு கொண்டு கண்டனத்தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்  என கூறினார்.அதற்கு நாமும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தோம்.இதனை விட முதல்வரின் அதிகார துஸ்பிரயோகம் என தெரிவித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என கூறினார்.

முதல்வரின் இணைப்பாளர் நியமனம் மாநகர சபை சட்ட விதியை அவர் மீறியுள்ளதாகவே அவதானிக்க முடிகின்றது என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சுபியான் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

எனவே  மக்களை ஏமாற்றும் இந்நியமன  விடயம் குறித்து முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகின்றேன்.
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் - பல கட்சிகள் ஆதரவு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கெதிராக கண்டனத்தீர்மானம் - பல கட்சிகள் ஆதரவு Reviewed by Vanni Express News on 5/03/2018 04:52:00 PM Rating: 5