வீடு மற்றும் காணி வேண்டும் என கோரி கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

-க.கிஷாந்தன்

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீடு பெற்றுத்தருமாறு கோரி இன்று கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமர்ந்து காணியையும், வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் பெற்றுத்தர கோரி கோஷமிட்டனர்.

நவதிஸ்பன கட்டுகல்ல, மொச்சகோட்டை ஆகிய  பகுதியில் வாழ்ந்த 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1987 ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அங்கு இருந்த குடும்பங்கள் சுமார் 10000 ரூபா கொடுப்பனவு வழங்கி வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கந்தபளை, நுவரெலியா தலவாக்கலை உள்ளிட்ட பிரதேசங்களில் குடியேறினர். இவர்களில் எஞ்சிய குடும்பங்ளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது 39 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 இற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில்  வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 01.07.2011 அன்று இவர்களுக்கு 20 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதில் பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் காணிகளை கொடுத்து இது வரை இவர்களுக்கு காணி வழங்கவில்லை என்று இதனை துரிதமாக வழங்க வேண்டும் என்றே இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் கடந்த பல வருட காலமாக அடிபடை வசதிகள் இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருவதாகவும், இது குறித்து பொறுப்பு வாய்ந்த பல அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இது குறித்து எந்த விதமான முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தேர்தல்காலங்களில் அரசியல்வாதிகள் வந்து தங்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவதாக தெரிவித்த போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தங்களது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கும் அதே வேளை இது குறித்து உடனடியாக தமக்கு உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

கொத்மலை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அபிவிருத்தி குழு கூட்ட தலைவரும், மத்திய மாகாண உறுப்பினருமான அசோக ஹேரத், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் போன்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கலந்தரையாடினர்.

இதன்போது ஆறு மாதத்திற்குள் இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கப்பெறும் எனவும், இதில் முதல்கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவிடம் இது தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அபிவிருத்தி குழு கூட்ட தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசோக ஹேரத் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்தார். 

இதன்போது உடனிருந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு, தான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இதன்பின் இவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடதக்கது.
வீடு மற்றும் காணி வேண்டும் என கோரி கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் வீடு மற்றும் காணி வேண்டும் என கோரி கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 5/14/2018 08:36:00 PM Rating: 5