ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது தடவையாகவும் பதவியேற்ற புட்டின்

ரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள விளாடிமிர் புட்டினின் பதவியேற்புக்கு அந்நாட்டில் எதிர்ப்புக் காணப்படும்போதிலும், நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியாக புட்டின் பதவியேற்றுள்ளார். 

இந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளுக்கு புட்டின் ஆட்சியமைக்கின்றார். 

ரஷ்யாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் 18 ஆம் திகதி நடத்தப்பட்டபோது, புட்டின் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 

இதற்கிடையில், ஜனாதிபதி புட்டினின் பதவியேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கலவரம் ஏற்பட்டதுடன், நவால்னியும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். 

இதனையடுத்து, அந்நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை காணப்படும்போதிலும், தலைநகர் மொஸ்கோவில் இவரது பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது 

66 வயதான புட்டினுக்கு பாரிய சவாலாகக் காணப்பட்ட 42 வயதான அலெக்ஸி நவால்னி, ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் தடை விதித்திருந்தது. 

ரஷ்ய ஜனாதிபதியாக முதற்தடவையாக கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி புட்டின் பதவியேற்றார். இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை முதலாவது தடவையாகவும், 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை இரண்டாவது தடவையாகவும் புட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார். 

ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக புட்டின் பதவியேற்க முடியாத நிலையிருந்தது. இதனையடுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரை அவர் பிரதமராகப் பதவி வகித்திருந்தார். 

இதனையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் புட்டின் மீண்டும் வெற்றி பெற்றிருந்தார். 

இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை மூன்றாவது தடவையாக அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்துவந்தார். தற்போது நான்காவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் புட்டின் பாரிய வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது தடவையாகவும் பதவியேற்ற புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது தடவையாகவும் பதவியேற்ற புட்டின் Reviewed by Vanni Express News on 5/07/2018 03:56:00 PM Rating: 5