மழை அல்லது இடியுடன் கூடிய மழை - காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடை வெப்பமண்டல ஒடுங்கல் வலயத்துடன் (வட மற்றும் தென் அரைக்கோள காற்றுகள் சந்திக்கும் தாழமுக்க வலயம்) இணைந்ததாக நாட்டைச் சூழ உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத்தின் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்ககூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 - 30 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலில் இருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். 

இதேவேளை, தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை - காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை - காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும் Reviewed by Vanni Express News on 5/18/2018 03:08:00 PM Rating: 5