சீரற்ற காலநிலை - 12 பேர் உயிரிழப்பு - 106,913 பேர் பாதிப்பு - முழுமையான விவரம்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு பூராகவும் 26,623 குடும்பங்களை சேர்ந்த 106,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை அனர்த்தம் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக அறிவிப்பதற்காக 1902 என்ற அவசர இலக்கத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. 

குறித்த இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அமைச்சின் செயலாளரிடம் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிரா அபேவர்தன தெரிவித்தார். 

ஏற்பட்டுள்ள விபத்துக்கள் மற்றும் சேதங்களுக்காக அரசாங்கத்தினால் அதிகபட்ச நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஏதாவது விதத்தில் வீடுகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பின் உடனடியாக கிராம சேவகருக்கு அது தொடர்பில் அறிவிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், வெள்ளம் மற்றும் பேரழிவு நிலைமைகளின் போது இழந்த அல்லது சேதமடைந்த தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு சான்றிதழ்கள் மற்றும் வீட்டு உரிமை பத்திரம் போன்றவற்றை மீளப்பெறுவதற்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் இருந்து எந்தவொரு நபரும் உதவியை கோர முடியும் என சட்டத்தரணி சங்கத்தின் தலைவர் யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை - 12 பேர் உயிரிழப்பு - 106,913 பேர் பாதிப்பு - முழுமையான விவரம் சீரற்ற காலநிலை - 12 பேர் உயிரிழப்பு - 106,913 பேர் பாதிப்பு - முழுமையான விவரம் Reviewed by Vanni Express News on 5/24/2018 02:14:00 PM Rating: 5