கம்பஹா மாவட்டத்தில் - 4,348 குடும்பங்களைச் சேர்ந்த 18,796 பேர் இடம்பெயர்வு

-ஐ. ஏ. காதிர் கான் 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக, கம்பஹா மாவட்டத்தில் 4,348 குடும்பங்களைச் சேர்ந்த 18,796 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக, கம்பஹா அனர்த்த முகாமைத்துவ அலகு தெரிவித்துள்ளது.

பியகம, தொம்பே, கம்பஹா, அத்தனகல்ல, மீரிகம, திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, கட்டான, ஜா - எல, வத்தளை, களனி, மஹர போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், பல்வேறு கிராமங்களுடனான போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையினால், இப்பிரதேசங்களிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்புக்கருதி, உறவினர்கள் வீடுகளை நாடிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.

கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு 1,544 குடும்பங்களைச் சேர்ந்த 7,068 பேர் இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இரண்டு வீடுகள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளன. 77 வீடுகள் அரைப்பகுதியாக சேதமடைந்துள்ளன. இப்பிரதேசங்களிலுள்ள 139 பாதுகாப்பான இடங்களில் 2,729 குடும்பங்களைச் சேர்ந்த 12,471 பேர் இதுவரை தஞ்சமடைந்துள்ளதாகவும், கம்பஹா அனர்த்த முகாமைத்துவ அலகு சுட்டிக்காட்டியுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவு மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடு வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, சகல பிரதேச செயலாளர்களுக்கும் உடனடி பணிப்புரை விடுத்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் - 4,348 குடும்பங்களைச் சேர்ந்த 18,796 பேர் இடம்பெயர்வு கம்பஹா மாவட்டத்தில் - 4,348 குடும்பங்களைச் சேர்ந்த 18,796 பேர் இடம்பெயர்வு Reviewed by Vanni Express News on 5/27/2018 02:14:00 PM Rating: 5