முசலிப் பிரதேசத்திலிருந்து அமைச்சர் ரிசாட்டை அகற்றிவிட பல முனைகளிலும் கடும் முயற்சி

நாட்டில் எப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்து வருகிறார்.

பல்வேறு விமர்சனங்கள், சரி பிழைகளுக்கு மத்தியில் ஒருசில விடயங்களை மாத்திரம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முசலிப் பிரதேசத்திலிருந்து அமைச்சர் ரிசாட் பதியுதீனை அகற்றிவிட  பல முனைகளிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் முசலிப் பிரதேசம் குறித்து எவ்வித கரிசனையும் அற்றிருந்தவர்கள் - முசலி மக்களைக்காட்டி பணம் சம்பாதித்தவர்கள் - முசலி மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் - முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகள் என்று சில தரப்பினர் இன்று அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நாட்டில் எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுள்ளது. அவரவர் தனக்கென ஒரு பாதை வகுத்து அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

ஆனால் இன்னொருவரை இழிவுபடுத்தி அவரது இடத்தையே பிடிக்க வேண்டுமென குறுகியதும்  அநாகரிகமானதுமான  வழிமுறைகளைப் பின்பற்றுவது அசிங்கமானது.

அமைச்சர் ரிசாட் முசலி, மன்னார், வன்னி என்று வளர்ச்சியடைந்து இன்று தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தலைவராகவும் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சராகவும் தன்னை கடந்த 18 ஆண்டுகளில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இதற்காக வெளித்தெரிந்த - தெரியாத எத்தனையோ  சவால்களை அவர் சந்தித்துள்ளார்.

ஒழுங்கான தூக்கமின்றி - நேரத்துக்கு உணவின்றி - இரவு பகலென 24 மணிநேரமும் அரசியல் செய்பவர் அவர். எந்த ஒரு வேளையும் எங்கோ ஒரு மக்கள் பணியில் அவரைக் காணலாம். எத்தனை கோடி ரூபாக்களும் அவரது சில அடிப்படைத் தியாகங்களுக்கு நிகராகாது.

அமைச்சர் ரிசாட் தன் சேவைகள் அனைத்தையும்  ஒழுங்குமுறையாக  ஆவணப்படுத்தி - விளம்பரப்படுத்தியிருக்காத குறை காரணமாக அவர் சிலரால் திட்டமிட்டு வீண்விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்.

முசலியைப் பொருத்தவரை ஒவ்வொரு குடிமகனும் அவரிடமிருந்து ஏதாவதொன்றைப் பெற்றிருப்பான். முசலிக்கு பியோன் பதவி முதல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வரை அவர் பெற்றுக் கொடுத்தார். இனி அவரவர்தான் அதற்கு மேல் வளர்ந்து கொள்ள வேண்டும். 

அவர்மூலம் ஆசிரியர் பதவி பெற்றவர் அதிபர் பதவிக்கு அவர் தன்னை உயர்த்தவில்லை என அவருக்கெதிராக போர்க்கொடி தூக்குவது நியாயமில்லை. அவரிடம் பதவி பெற்றவர் தன் மனைவிக்கும் பதவி தரவில்லை என கோபிப்பதில் நியாயமில்லை.

முசலிக்கு அவரால் முடிந்ததை செய்துள்ளார். அதிலுள்ள போதாமைகளை இனங்கண்டு மற்றவர் செய்ய முயற்சிக்க வேண்டியதுதான். மாறாக அவர்மீது வசைபாடித் திரிவது தங்கள் இயலாமைகளை மக்களுக்கு மறைப்பதாகும்.

வட மாகாண சபை உருவாக முன்னர் முசலியில் சிலாவத்துறை முதல் மறிச்சுக்கட்டி வரையும் அளக்கட்டு, வெள்ளிமலை என்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களுக்கு அவர் கொடுத்த குடியிருப்புக் காணிகளை அவ்வளவு இலகுவாக மக்கள் மறந்துவிட முடியாது. 

தற்போது கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, காணி  என சில முக்கிய உள்ளூர் விடயங்கள் வட மாகாண சபையின் கட்டுப்பாட்டிலும் புறக்கணிப்பிலும்  இருப்பதால் முசலி மக்களுக்கு உச்சளவு சேவைகளை வழங்குவதில் அமைச்சர் ரிசாட் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சில சுயநல தீய சக்திகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை எதிர்க்கும் சில இனவாத சிங்கள, தமிழ் அரசியல் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவது வேதனையளிக்கிறது.

அமைச்சர் ரிசாடை அகற்றிவிட்டு கற்பனை பண்ணிப் பார்த்தால் புரியும் இப்போதுள்ள அவரது பெறுமதி. தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் அவர் ஈர்க்கப்பட்டுள்ள காரணத்தினால் முசலி மற்றும் மன்னாருக்கு அவர் அடிக்கடி வந்து போவதிலும் மக்கள் நலனில் விரைந்து ஈடுபடுவதிலும் சில குறைபாடுகள் இருப்பதையும் இடைவெளி ஏற்பட்டுள்ளதையும்  நாம்கூட பகிரங்கமாக சுட்டிக்காட்டி வருகின்றோம். அதற்காக அவரை இங்கிருந்து ஓரங்கட்ட நினைப்பது படுமுட்டாள்தனம்.

சமூகநலன்கருதி பல விடயங்களை அவர் வெளிப்படுத்துவதில்லை. புத்தளம் - மன்னார் வீதியைத் திறந்த அவர் அந்த வீதி தொடர்பான வழக்கு வந்ததும் முசலி சிறைப்படுத்தப்பட்டதை சாதகமாகப் பயன்டுத்தியே முசலியில் காணி மற்றும் வீடுகளை கணிசமானளவு பெற்றுக் கொடுத்தார். இவ்வாறே இன்னும் ஏராளமான விடயங்களை அவர் இனவாதத் தாக்குதல்களைக் கருத்திற் கொண்டு சமூகநலனுக்காக தற்போதும் மறைத்து செய்து வருகிறார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறித்த பல குற்றச்சாட்டுகள், பல முறைப்பாடுகள், பல வழக்குகள் என பல்முனைப் போர்க்களங்களையும் அவர் தைரியமாகக் களம் காண்கிறார். அவர் நாட்டைவிட்டு ஓடவில்லை, எங்கும் ஒழிந்து திரியவில்லை.

மொத்தத்தில் அமைச்சர் ரிசாட் நாட்டை நேசிக்கும் ஒரு உண்மையான தேசப்பற்றாளன். அதனால்தான் முஸ்லிம்கள் மாத்திரமன்றி இன்று தமிழ், சிங்கள மக்களும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் எனும் ஆளுமையில் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் பயணிக்க விரும்புகின்றனர்.

அல்லாஹ் இத்தகைய அந்தஸ்தை அவருக்கு வழங்கியுள்ளான்.

முகுசீன் றயீசுத்தீன் 
உப தவிசாளர் 
முசலி பிரதேச சபை
முசலிப் பிரதேசத்திலிருந்து அமைச்சர் ரிசாட்டை அகற்றிவிட பல முனைகளிலும் கடும் முயற்சி முசலிப் பிரதேசத்திலிருந்து அமைச்சர் ரிசாட்டை அகற்றிவிட பல முனைகளிலும் கடும் முயற்சி Reviewed by Vanni Express News on 6/29/2018 06:23:00 PM Rating: 5