முதுகெலும்புள்ள ஆண்கள் வேண்டும்

-அ(z)ஸ்ஹான் ஹனீபா

உலகில் பணக் கொள்ளயைர்கள் அதிகரித்து வரும் அதேவேளை ஆண்களை விலைக்கு விற்று பெண்களது சொத்து, பணம், செல்வம் அனைத்தையும் கொள்ளையடிக்கும் சீதன மாபியாக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். 

“நாம் சீதனம் கேட்கவில்லை, ஆனால் வீடு இருந்தால்  திருமணம் நடக்கும்” இப்படி கேட்கும் வெட்கம் கெட்ட சீதனக் கொள்ளையர்களான பெற்றோர்களும் எமது வடபுலத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். 
 ஆணால் உழைக்க வக்கில்லை எனில் எவ்வாறு தனது மனைவிகளுக்காக  செலவழிப்பான், உழைக்கத் தெரியாதவனுக்க எதற்குத் திருமணம்!!!

உடல், செல்வம் இரண்டிலும் வலிமை கொண்டவனுக்குத் தான் இஸ்லாம் திருமணத்தை விதியாக்கியுள்ளது என்பதை அனைத்து பெற்றோர்களும், இளைய சமுதாயத்தினரும் அறிய வேண்டிய கடப்பாடுண்டு.

உடலில் சக்திகள், வலிமைகள் நிறைந்திருக்கும் ஆண் வர்க்கத்தினர், மற்றும் அவர்களது பெற்றோர் சீதனத்தை பெற்றுத் தான் திருமணம் முடிப்பதாக கங்கணம் கட்டி அலையும் போது, உடல் வலிமை குறைந்த பெண்ணால் சொத்துக்களையும் செல்வங்களையும் உழைத்து சேர்ப்பது என்பது சாத்தியமான ஒன்றா?!

ஜாஹிலிய்யா கால மக்களது நிலை பற்றி “அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை கிடைத்துவிட்டதாக நற்செய்தி சொல்லுமிடத்து கோபத்தால் அவரது முகம் கறுத்துவிடும்” என்று அல்லாஹ் கூறும் நிலை தற்போது எமது முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக இலங்கையின் வடக்கு, மற்றும் கிழக்கில் தலைவிரித்தாடுகிறது. 
பெண்களை பிள்ளைகளாக பெற்றெடுக்கும் தருணத்தில் பெற்றோரது முகத்தின் நிறம் மாற்றம் பெற ஆரம்பிக்கிறது. காரணம் சீதனக் கொடுமை பெற்றோரது கண் முன் வந்து செல்லும் பயங்கர தோற்றம் தான்.

தனது ஆண்கள் விலை மகன்களாகவும், பேரம் பேசப்படும் ஜடங்களாகவும் சமூக மட்டத்தில் ஓர் மிக மோசமான சிந்தனை கட்டவிழ்த்துவிடப்பட்டு, சீதனம் பெறாதோரை கௌரவக் குறைச்சலாக நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கற்றவன், பட்டம் பெற்றவன், ஆலிம், கறுப்பு, வெள்ளை, உயரம், கட்டை, பிரதேசம் என்ற வேறுபாடுகளின்றி சீதனத்திற்கு முன்னுரிமையளித்து இஸ்லாத்திற்கு முரணான ஹராமான சீதனத்தை பெண் வீட்டாரிடமிருந்து வற்புறுத்தி அபகரித்து, கொள்ளையடித்து, சுரண்டி அனுபவிக்கும் அனைத்து ஆண்களும், அவர்களது பெற்றோர்களும் உண்மையில் கப்ரிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை நிச்சயம் நினைவில் கொள்வது அவசியமாகும்.

அல்லாஹ் “விசுவாசிகளே! நீங்கள் உங்களது சொத்து செல்வங்களை (ஹராமான முறையில்) அநியாமாக உங்களுக்கிடையில் சாப்பிட வேண்டாம்” 
என்று எச்சரித்திருக்கும் அதேவேளை ஆண் தான் பெண்ணுக்கு சொத்து செல்வங்களை மஹராக வழங்க வேண்டுமென பணித்துள்ளது.

இச்சீதனம் வட்டியை விட மிகவும் கொடிய பாவமாகும் “ஓர் குடும்பத்தாரை துன்புறுத்தி, வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி அவர்களிடமிருக்கும் அனைத்து சொத்து செல்வங்களையும் அபகரித்து, சுரண்டிப் பெற்றுக் கொள்வது ஹராத்தை விரும்பி வாங்கி உண்பது மாத்திரமின்றி நரகத்திற்கு தம்மை தெரிந்து கொண்டே தயார்படுத்துவதோடு இது முற்றிலும் அநியாயத்தின் உச்சகட்டமுமாகும்”

சுருங்கச் சொல்லுமிடத்து *“ஆண்மை என பெருமிதம் பாராட்டும் ஓர் உறுப்புக்குத் தான் இவ்வளவு விலையும் சொத்துக்களுமாகும்”* இவ்வாறு விலை போகும் ஆண்கள் நிகாஹின் கடமைகளான கூறுகள் (அர்கான்)  நிரப்பாக இருக்கும் பட்சத்தில் முழு சொத்துக்களையும் சீதனப் பிச்சையாக இரகசியமாக எழுதி பெற்றதன் பின்பு வெளியில் மஹரை 1001 ரூபா அல்லது இரண்டு, மூன்று பவுன்கள் நகைகளை கொடுத்துவிட்டு பசுத்தோல் போர்த்திய புலியைப் போன்று தம்மை நல்லவர்களாக காண்பித்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் ஓர் கீழ்த்தரமான கூட்டம் உருவாகி வருவது கவலைக்கிடமான ஒன்றாகும். 

பெண் காசுக்காக தனது இச்சையை நிவர்த்தி செய்யும் சந்தர்ப்பத்தில் அவளை “விபச்சாரி, விலை மாது, நடத்தை கெட்டவள், தேவிடி, வேசை” என்றெல்லாம் பட்டம் சூட்டும் இச்சமூகம் ஓர் ஆண் பணம், சொத்துக்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு தனது இச்சையை பூர்த்தி செய்யும் போது மௌனித்து அவன் “நல்ல மாப்பிள்ளை, புரிந்துணர்வுள்ளவர்” என்று நல்ல பெயர் மட்டும் சூட்டுவது பொருத்தமா!!!

நிகாஹின் அர்கான்கள் சரியாக இருப்பதனால் ஆண் அதில் மறைந்துவிடுகிறான் இல்லையேல் இவனும் “விபச்சாரன், நடத்தை கெட்டவன், விலை மகன்” என்று பெயர்கள் கொண்டு நிச்சயம் அழைக்கப்பட வேண்டியவன் என்பதில் சந்தேகமில்லை. 

இருவரும் தம்பதிகளாக ஆன பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது இச்சையை (உடல், உளவியல் தேவைகளை) நிவர்த்தி செய்து இன்பம் பெறும் பொழுது ஏன் பெண் மட்டும் அனைத்து அல்லது சில சொத்துக்களை ஆணுக்கு வழங்க வேண்டும்! திருமணத்தின் பெயரில் கொள்ளையின் முழு வடிவமாக மாற்றம் பெற்றிருக்கும் சீதனம் உண்மையில் ஹராமானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

சீதனப் பிச்சையை வேண்டிநிற்கும் மாப்பிள்ளைகள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சொந்தங்கள் அனைவரும் இவ்வுலகில் வேண்டுமானால் தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் மரணத்திற்குப் பின்னும் மறுமையிலும் ஒரு போதும் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. 

அல்லாஹ் நீதமானவன், சீதனத்தை ஊக்குவித்தவர்கள், வாங்கியவர்கள், எழுதியவர்கள், சாட்சிகள், பங்குதாரர்கள் அனைவரும் குற்றத்திலும் தண்டனையிலும் சமமானவர்கள், நிச்சயம் ஒவ்வொருவருக்குரிய தண்டனை சிறப்பாக வழங்கப்படும்.

பெண்களிடமிருந்து சூறையாடாத கொள்ளையடிக்காத முதுகெலும்புள்ள, ஆண்மையுள்ள, வீரமுள்ள, பெண்களுக்கு ஹலாலாக உழைத்துக் கொடுக்கும் பொறுப்பான மாப்பிள்ளையாக, கணவனாக, தந்தையாக வாழ வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்
முதுகெலும்புள்ள ஆண்கள் வேண்டும் முதுகெலும்புள்ள ஆண்கள் வேண்டும் Reviewed by Vanni Express News on 6/30/2018 11:24:00 PM Rating: 5