ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை

-அஸ்லம் எஸ்.மௌலானா

ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை - சுகாதாரம், கல்வி அபிவிருத்திக்கு வாய்ப்பு..!

கல்முனை மாநகரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகர சபையுடன் கல்முனை மாநகர சபையை இணைக்கும் இரட்டை நகர சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்நடத்துவதற்கு 
நியுரம்பேர்க் மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குழு நிலைக்கு சபை நடவடிக்கை கொண்டு வரப்பட்டு, அதில் ஓர் அங்கமாக நியுரம்பேர்க் மாநகராட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அமானுல் ஹனிபா கலந்து கொண்டு அம்மாநகராட்சியின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு செய்தார்.

இதன்போது இரட்டை நகர சகோதரத்துவ திட்டத்தின் நோக்கம், இலக்கு மற்றும் அடையக்கூடிய பயன்கள் தொடர்பில் அவர் விபரித்துக் கூறினார்.

அவர் தனதுரையில் குறிப்பிடுகையில்;

"நியுரம்பேர்க் நகரமானது ஜேர்மனியில் அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ள 14 பெரிய நகரங்களுள் ஒன்றாகும். உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமூக, பொருளாதார துறைகளில் தன்னிறைவு கண்ட அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு விசாலமான, செல்வந்த நகரமாகும். மிகவும் புராதானமிக்க இந்த நகரில் பல தத்துவ ஞானிகளும் கல்வியியலாளர்களும் உருவாக்கியுள்ளனர். பிரசித்த கம்பெனிகளும் உள்ளன.

உங்கள் கல்முனை நகரம் சுத்தமில்லாமல் இருப்பதைப் பார்த்து   நான் மிகவும் கவலையடைகின்றேன். எனது ஆசை இந்த நகரை பசுமை மிக்கதாக மாற்ற வேண்டும் என்பதே.

இலங்கையில் கல்முனையை மாத்திரமே எமது சகோதர நகரமாக இணைத்துள்ளோம். இதற்கு முக்கிய காரணம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அங்கு பல தடவைகள் வந்து எம்மை சந்தித்து, ஆர்வமூட்டி கேட்டுக்கொண்டதேயாகும். அவரது ஏற்பாட்டில் சில வருடங்களுக்கு முன்னர் கல்முனையின் முன்னாள் மேயர் நிஸாம் காரியப்பர் அவர்களை ஜேர்மனுக்கு அழைத்து, எங்கள் மேயருடன் இரட்டை நகர சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என தற்போதைய முதல்வர் ஏ.எம்.றகீப் எம்மிடம் கேட்டுக்கொண்டமைக்கமைவாக நான் இங்கு விஜயம் செய்து, திங்கட்கிழமை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதுடன் இன்று கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றாக சந்தித்து கலந்துரையாடுவதில் மகிழ்ச்சியடைவதுடன் இரட்டை நகர சகோதரத்துவ திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டம் கல்முனை நகருக்கு பெரும் வரப்பிரசாதமானதாகும். இதன் பிரகாரம் கல்முனை மாநகர பிரதேசங்களின் சுகாதாரம், கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார துறைகளின் முன்னேற்றத்திற்கு எம்மால் அதிகபட்ச உதவிகளை செய்ய முடியும். உங்களது ஒத்துழைப்பு சரியாக இருக்குமானால் எதையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

உங்கள் மேயர் றகீப் அவர்களின் வேண்டுகோளையேற்று எங்கள் மேயருடன் உரையாடி முதற்கட்டமாக இருபதாயிரம் மில்லியன் யூரோ நிதியை துஒக்கீடு செய்வதற்கு தீர்மானித்துள்ளேன். 

கட்டிடங்கள் கட்டுவதை விட சுகாதாரம், சுற்றாடல் பாதுகாப்பு, கல்வி அபிவிருத்திகளுக்கே நாம் முன்னுரிமையளிப்போம். பிளாஸ்ட்ரிக், பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழித்து சூழலையும் மனித உயிர்களையும் பாதுகாப்பதற்கு போராடி வருகின்றோம். மக்களின் வாழ்வாதாரம், குடியிருப்பு தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றோம். 

ஏற்கனவே சாய்ந்தமருதில் பல கோடி ரூபா செலவில் சுகாதார மத்திய நிலையம் ஒன்றை அமைத்துள்ளோம். ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு சிசு மரணத்தை கட்டுப்படுத்துவதற்காக இங்கியுபேட்டர் இயந்திரமொன்றை வழங்கியுள்ளோம். 

எமது இரட்டை நகர திட்டம் வெற்றியளிக்குமாயின் இவ்வாறான மக்கள் நலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பில்லியன் நிதியை உங்களுக்கு பெற்றுத்தர முடியும். இதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜேர்மனுக்கு விஜயம் செய்யுமாறு உங்கள் முதல்வர் றகீப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இப்பகுதி இளைஞர்களின் தொழில் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு மேசன், தச்சுத் தொழில், நகை உற்பத்தி போன்ற துறைகளை நவீன தொழில்நுட்பங்களுடன் வளர்ப்பதற்காக கல்முனை நகரில் தொழில் பயிற்சி நிலையமொன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்

எங்களுக்கு அரசியல், சமயம் சார்ந்த விடயங்களில் தலையீடு செய்வதிலார்வமில்லை. மனிதாபிமான சேவைகளை முன்னெடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும். அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நியுரம்பேர்க் பிரதிநிதி அமானுல் ஹனிபா, அவர்களது சில கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்தார்.

அதேவேளை இரட்டை நகர திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தெரிவித்ததுடன் நியுரம்பேர்க் மாநகராட்சிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை ஜேர்மன் நியுரம்பேர்க் மாநகருடன் இணைகிறது கல்முனை Reviewed by Vanni Express News on 6/27/2018 11:26:00 PM Rating: 5