கல்முனையில் அபிவிருத்திகளை பூரணப்படுத்த பணிப்பு..!

-அஸ்லம் எஸ்.மௌலானா


கல்முனையில் நகர திட்டமிடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை பூரணப்படுத்த பணிப்பு..!

நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் 260 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் அவசரமாக நிறைவு செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தக்காரர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் கல்முனை மாநகர பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றபோதே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் மேலதிக செயலாளர் முஹம்மட் நபீல் முன்னிலையில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதில் பிரதி அமைச்சர் பைஸல் காஸிம், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், ரவூப் ஹஸீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளஷாத், கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ரி.சர்வானந்தன், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா, உட்பட நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஒப்பந்தக்காரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 21 அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இவற்றுள் சில வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் சில வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் திருப்திகரமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இன்னும் சில வேலைத் திட்டங்கள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டது.

சில வேலைத் திட்டங்களின் மந்தகதி தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.உமர் அலி, எம்.எஸ்.எம்.சத்தார், சட்டத்தரணி றோஷன் அக்தர், ஏ.எம்.பைரூஸ், எம்.எம்.நிசார் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இவை தொடர்பில் ஒப்பந்தக்காரர்களிடம் விளக்கம் கோரப்பட்டதுடன் குறித்த சில வேலைத் திட்டங்களை அடுத்த மூன்று வாரங்களில் முழுமைப்படுத்தி மாநகர சபையிடம் கையளிக்க வேண்டும் என அமைச்சின் மேலதிக செயலாளர் முஹம்மட் நபீல், மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் ஆகியோரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு ஒப்பந்தஙகாரர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

கல்முனை பொது நூலக புனரமைப்பு, சந்தாங்கேணி விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாணம், கொடியேற்றப்பள்ளி சுற்று வீதி விஸ்தரிப்பு,  மருதமுனை நூலக கேட்போர்கூட நிர்மாணம், சிறுவர் பூங்கா நிர்மாணம், பிரான்ஸ் சிற்றி வீதி வடிகான் நிர்மாணம், சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா புனரமைப்பு, கடற்கரை விளையாட்டு மைதான புனரமைப்பு, தோணா புனரமைப்பு, பொலிவேரியன் சிற்றி வீதி வடிகான் நிர்மாணம், நற்பிட்டிமுனை விளையாட்டு மைதான புனரமைப்பு உட்பட 21 அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்திருந்த 260 மில்லியன் ரூபா நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனையில் அபிவிருத்திகளை பூரணப்படுத்த பணிப்பு..! கல்முனையில் அபிவிருத்திகளை பூரணப்படுத்த பணிப்பு..! Reviewed by Vanni Express News on 6/27/2018 10:13:00 PM Rating: 5