பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கு வவுனியா பட்டானிச்சூர் பிரதேச மக்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

-இமாம் றிஜா

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா பட்டானிச்சூர், பட்டக்காடு மற்றும் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, குறித்த பிரதேச மக்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர்.

இவ்வாறு, பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது, வீதியின் இரு மருங்கிலும் ஒன்று௯டி நின்ற சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மலர் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இதன்போது, தனக்கு கிடைத்த பிரதி அமைச்சர் பதவி மூலம் பட்டானிச்சூர் பிரதேச மக்களுக்கு தேவையான அபிவிருத்தி பணிகளை எந்தவிதமான பாகுபாடின்றி முன்னெடுக்கப் போவதாகவும், தொடர்ந்தும் மக்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு அவர்கள் விரும்புகின்ற துறைகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதுடன், பெண்களை தலைமைத்துவமாக கொண்டியங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் திட்டமிட்டிருக்கிறேன்.

பட்டானிச்சூர் பகுதிகளில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதுடன், குறுகிய காலப்பகுதியில் முன்னெடுக்க ௯டிய பணிகளை அவசரமாக முன்னெடுப்பதுடன், நீண்ட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் திட்ட வரைபுகளை வரைந்து அரசாங்கத்தின் நிதி உதவிகளைப் பெற்று அதனை முன்னெடுக்கவும் எண்ணியுள்ளேன்.

எனவே, இவ்வாறான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டுமானால் எங்களிடத்தில் ஒற்றுமை மிகவும் அவசியமாகும். ஒற்றுமையோடு பணியாற்றினால்தான் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும்.

எங்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையை சீர்குழைப்பதற்கு பணமூட்டைகள், பசப்புவார்த்தைளுடன் பலர் வருவார்கள். பிரதேச வாதம் பேசுவார்கள். எனவே அவர்களிடத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கு வவுனியா பட்டானிச்சூர் பிரதேச மக்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கு வவுனியா பட்டானிச்சூர் பிரதேச மக்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. Reviewed by Vanni Express News on 6/25/2018 06:44:00 PM Rating: 5