வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. 

இரு நாட்டு தலைவர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஹோட்டலில், இலங்கை நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. 

அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில் பரஸ்பரமாக கைகுலுக்கி கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, இருவரும் ஊடகவியலாளர்களை சந்திக்கும் வண்ணம் பிரதான பகுதியிலிருந்து அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு, நடந்து சென்று, அங்கு ஒரே இருக்கையில் அமர்ந்து சர்வதேச ஊடகவியலாளர்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர். 

அப்போது கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவருடனான இன்றைய பேச்சுவார்த்தையில், தமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு என்பது, அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என்று வர்ணித்தார். 

மேலும், ´´இப்போது நாம் இருக்கும் இடத்தை அடைந்திருப்பது, அவ்வளவு எளிதானது இல்லை´´ எனவும் வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

50 ஆண்டுகளுக்கும் மேலாக, எதிர்எதிர் துருவங்களாக திகழும், அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு, உலக அரங்கில், அனைத்து மட்டத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வடகொரியா உருவான பின்னர், வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்தித்திக் கொள்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம் வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம் Reviewed by Vanni Express News on 6/12/2018 02:26:00 PM Rating: 5