மின்சாரம் தடைப்பட்டதால் நுரைச்சோலை நரக்களி பகுதியில் போராட்டம் - Photos

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்தியாளர்கள் - ஆர்.ரஸ்மின். ஆர் எம். சப்ராஸ் 

கற்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவது மற்றும் புத்தளம் மின்சார சபை ஊழியர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளை கண்டித்தும் நுரைச்சோலை (நரக்களி) அனல் மின் நிலையத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பல பிரதேச மக்கள் ஒன்றினைந்து மறியல் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

நேற்று வியாழக்கிழமை (6) இரவு 8.45 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பாலாவி - கற்பிட்டி வரையிலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டமையினால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் , மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

எனவே, தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமையை கண்டித்தும், இதுதொடர்பாக தமக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரியே மக்கள் 
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வீதி மறியல் போராட்டத்தினால் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு செல்லும் வீதியின் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டிருந்ததுடன், நுரைச்சோலை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பஸ்ஸலும், மோட்டார் சைக்கிள்களிலும் வருகை தந்த போது, அனல் மின் நிலையத்திற்கு செல்லும் வீதியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குறித்த ஊழியர்களை பணிக்கு செல்வதற்கு இடமளிக்கவில்லை. இதனால் குறித்த ஊழியர்கள் பிரதான வீதியில் பல சில மணி நேரம் காத்து நின்றனர்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுடனும், பொது மக்களுடனும் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சார தடைக்கு நிரந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு செல்லப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும், பொதுமக்களும் ௯றி நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியின் நடுவே அமர்ந்தனர்.

எனினும், லக்விஜய அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணிக்கு செல்ல அனுமதிக்குமாறும், இதுதொடர்பில் திறந்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கொடுத்த வாக்குறுதியை அடுத்தே, சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னர் அனல் மின்சார நிலைய ஊழியர்கள் பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், மக்கள் குறித்த தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, பொதுமக்களுக்கும், மின்சார சபை உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேச பொறியியலாளர்  முஹம்மட் இர்ஷாத் மற்றும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், கற்பிட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம்.இன்பாஸ் உட்பட பொதுமக்கள் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பேர் என இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதன்போது, மின்சாரம் தடைப்படுவது குறித்து மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ் மற்றும் என்.டி.எம்.தாஹிர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

மின்சாரம் அடிக்கடி தடைப்படுவது பற்றி உரிய அவதானம் செலுத்துவதாக மின்சார சபை உயர் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, நேற்று காலை ஆரம்பமான போராட்டம் நண்பகல் 12 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கடந்த வாரம் பாலாவி கரம்பை பகுதியில் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர், தாக்கப்பட்டமையை அடுத்து பாலாவி முதல் கற்பிட்டி வரையிலான பகுதியில் இவ்வாறு அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தடைப்பட்டதால் நுரைச்சோலை நரக்களி பகுதியில் போராட்டம் - Photos மின்சாரம் தடைப்பட்டதால் நுரைச்சோலை நரக்களி பகுதியில் போராட்டம் - Photos Reviewed by Vanni Express News on 6/09/2018 12:14:00 AM Rating: 5