ஜனாதிபதியை தீர்மானிப்பது சிறுபான்மை மக்களாகிய நாங்கள் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்

-க.கிஷாந்தன்

வடக்கு மாகாணத்தில் எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் அவர்களும், முதலமைச்சர் விக்னேஷ்வரன் அவர்களும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணையப்போவதாக தெரிவித்துள்ளமை மிகவும் ஒரு சந்தோஷமான விடயம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்திற்கமைவாக அம்பாறை, அக்கரைபற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் வகுப்பறைக்கான 3 மாடி கட்டிட தொகுதி   26 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை மக்கள் ஒன்றிணைய வேண்டும். சிறுபான்மை மக்கள் இணைந்தால் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்ககூடிய பொறுப்பு சிறுபான்மை மக்களாகிய எங்களிடம் இருக்கு என்பதை நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டும்.

அந்த பொறுப்பை வகிக்க கூடிய கிழக்கு முஸ்லீம் மக்கள், வடக்கில் உள்ள தமிழ் மக்கள், மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தினுடைய கட்டாயம் என்பதை நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் இந்த சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை, ஆட்சி அமைப்பதற்கு ஒரு தீர்மானிக்க கூடிய சக்திகளாக மாற வேண்டும்.

இந்த நாட்டில் பெரும்பான்மை கட்சிகள் பல காணப்படுகின்றது. இந்த பெரும்பான்மை கட்சிகள் கூட ஆட்சியை அமைக்க வேண்டும் என்றால் சிறுபான்மை மக்களின் உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உணர்த்த வேண்டும் என்றார்.
ஜனாதிபதியை தீர்மானிப்பது சிறுபான்மை மக்களாகிய நாங்கள் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும் ஜனாதிபதியை தீர்மானிப்பது சிறுபான்மை மக்களாகிய நாங்கள் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும் Reviewed by Vanni Express News on 6/25/2018 06:07:00 PM Rating: 5