படகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் 3 நாட்களுக்கு முன்பு பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை முதலில் 130 பேர் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீட்பு படையினர் மற்றும் ​பொலிஸார் நடத்திய விசாரணையில் படகில் 190 க்கும் அதிகமானோர் மாயமானதாக தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாயமானோர் 190 க்கும் அதிகமானோர் என நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து 3 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்து என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

படகில் 60 நபர்களை ஏற்றுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சுமத்ரா படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அளவிலான ஆட்களையும் பொருட்களையும் ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில், நீர் மூழ்கி கப்பல்களும், நீர் மூழ்கி வீரர்களும், நீருக்கு அடியில் இயங்க கூடிய ட்ரோன்களும் ஈடுபட்டிருப்பதாக தேசிய மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவின் மிக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான தோபா ஏரியில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர் கதையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
படகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு படகு கவிழ்ந்ததில் மாயமானோரின் எண்ணிக்கை 190 ஆக அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 6/20/2018 05:05:00 PM Rating: 5