மகஇலுப்பல்லம் அ/கெலேதிவுல்வெவ வித்தியாலயத்திற்கு இஷாக் எம்.பி. 1,500,000/- ரூபாய் நிதியொதுக்கீடு

-ஐ.எம்.மிதுன் கான் – கனேவல்பொல

இப்பொலோகம பிரதேச சபைக்கு உட்பட்ட அ/கெலேதிவுல்வெவ வித்தியாலயத்தில் புதிய கட்டிடமொன்றை நிர்மானிப்பதற்கு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் 1,500,000/-  ரூபாய் நிதியொதுக்கீடு செய்திருந்தார்.

குறித்த கட்டிடமானது சகல வேலைகளும் முடிக்கப்பட்டு 2018.07.24 அன்று மாணவர்கள் பாவனைக்காக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் அதிபர் தீபிகா ஜயசுந்தரவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டதோடு பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இங்கு உரையாற்றுகையில்,

தற்போதைய பாராளுமன்றில் நான் உட்பட அனுராதபுர மாவட்டத்தைச்சேர்ந்த 9 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். இதில் 3 கேபினெட் அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தங்கள் மாவட்டம் குறித்து அதிக அக்கறையுடன் செயல்படுவார்களேயானால் இன்று எமது பிரதேசத்தில் பாடசாலைகள் சகல அபிவிருத்திகளையும் எட்டியிருக்கும்.

சக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரதேசத்தினை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்வது குறித்து பராமுகமாக இருப்பது  மிகவும் வேதனையளிக்கின்றது. இது குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பினால் அரசாங்கத்தை குறை கூறி தப்பிவிட எத்தனிப்பது வேடிக்கையாகவும் இருக்கின்றது.

அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெறாவிட்டாலும் கூட எனது அயராத முயற்சியினால் வெளிநாட்டு தனவந்தர்களின் உதவிகளைப்பெற்று என்னாலியன்றவரை எனது மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காய் நான் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் பல சவால்களுக்கு மத்தியில் நிறைவடைந்து வருகின்றது.

நான் பாராளுமன்றம் சென்ற காலம் முதல் என்னால் ஆற்றப்பட்ட சேவைகளுள் அனேகமானவை கல்வித்துறையை மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. இதற்குமேலும் கல்வித்துறையில் என்னாலியன்ற அனைத்து சேவைகளையும் முன்னெடுத்து செல்வேன் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.  வாக்கு வங்கிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக தங்கள் இயலாமையை அரசாங்கத்தை காட்டி மறைத்து மக்களை மடையர்களாக்கும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்  என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மகஇலுப்பல்லம் அ/கெலேதிவுல்வெவ வித்தியாலயத்திற்கு இஷாக் எம்.பி. 1,500,000/- ரூபாய் நிதியொதுக்கீடு மகஇலுப்பல்லம் அ/கெலேதிவுல்வெவ வித்தியாலயத்திற்கு இஷாக் எம்.பி. 1,500,000/- ரூபாய் நிதியொதுக்கீடு Reviewed by Vanni Express News on 7/24/2018 11:43:00 PM Rating: 5