கல்முனை சந்தையின் முதற்கட்ட புனரமைப்புக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

-அஸ்லம் எஸ்.மௌலானா, அகமட் எஸ்.முகைடீன்

மிகவும் பழைமை வாய்ந்த கல்முனை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் புனரமைப்பு திட்டத்திற்கான முதற்கட்ட நிதியாக 50 மில்லியன் ரூபாவை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

கல்முனை சந்தை புனரமைப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இன்று திங்கட்கிழமை மாலை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இந்நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அரச தொழில் முயற்சி, கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம். கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரஹ்மத் மன்சூர், எம்.எஸ்.எம்.சத்தார், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எம்.நிசார், ஏ.எம்.பைரூஸ் ஆகியோருடன் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், கட்டடத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்முனை சந்தை மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இம்சாத், சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமாலதீன், பிரதி தலைவர் ஏ.எச்.ரஸ்ஸாக், செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிந்தனர்.

இதன்போது முதற்கட்டமாக கல்முனை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் கூரையை நவீன முறையில் புனரமைப்பு செய்வதெனவும் அதற்காக அரச கட்டிடங்கள் திணைக்களத்தின் மதிப்பீட்டறிக்கையின் பிரகாரம்   50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இவ்வருட இறுதிக்குள் இவ்வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.

அத்துடன் அடுத்த வருடம் இரண்டாம் கட்டமாக இச்சந்தைக் கட்டிடத் தொகுதியின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதெனவும் அதற்கான மதிப்பீட்டறிக்கைகளை தயார் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை பொதுச் சந்தை புனரமைப்புக்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியினை பெறுவதற்கான ஆவணங்களை குறித்த திணைக்களத்திற்கு சமர்பிக்குமாறு கட்டடத் திணைக்கள அதிகாரிகளுக்கு இதன்போது அமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
கல்முனை சந்தையின் முதற்கட்ட புனரமைப்புக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கல்முனை சந்தையின் முதற்கட்ட புனரமைப்புக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு Reviewed by Vanni Express News on 7/02/2018 11:39:00 PM Rating: 5