புதிய தேர்தல் முறைமையை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது ஏன் ?

-பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு

''மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு தொகுதிகள் பிரிக்கப்படும்  என்று பிரதமரும் ஜனாதிபதியும் எமக்கு வாக்குறுதி வழங்கியதன் காரணத்தாலேயே நாம் மாகாண சபை திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம்.ஆனால், அந்த வாக்குறுதி மீறப்பட்டு முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் புதிய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதற்கு நாம் இணங்கமாட்டோம்.பழைய முறைமையின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.''

இவ்வாறு சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதிலோ அல்லது பழைய முறையில் நடத்துவதிலோ எங்களுக்கு எதுவிதப் பிரச்சினையும் இல்லை.எங்களது குறி  எல்லாம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் மீதுதான் உள்ளது.எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம்.

இப்போது பரவலாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகின்றது.புதிய தேர்தல் முறைமைக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கை உயர்த்திவிட்டு -அது தொடர்பிலான சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு இப்போது இக்கட்சி பழைய முறைமையைக் கோருகின்றது என்று அந்தக் குற்றச்சாட்டு அமைந்துள்ளது.

பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ எங்களுக்குப் பிரச்சினை கிடையாது.புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு அரசு விரும்பினால் மாகாண சபைகளில் தற்போது இருக்கின்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு புதிய முறைமை அமைய வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு.

மாகாண சபை திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களிப்பதற்கு முன் இந்த நிபந்தனையை நாம் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் முன்வைத்தோம்.புதிய முறைமையால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் இருவரும் எமக்கு வாக்குறுதி அளித்தனர்.அந்த வாக்குறுதியை நம்பியே நாம் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

ஆனால்,அதன்பின் தயாரிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தை பார்க்கும்போது அது முஸ்லிம்களுக்கு ஆபத்தானதாக இருப்பதைக் கண்டோம்.முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கணிசமான அளவு குறையக்கூடியவாறு தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.இதனால்தான் நாம் இப்போது புதிய முறைமையை எதிர்த்து பழைய முறைமையில் தேர்தல் நடத்துமாறு கூறுகிறோம்.
புதிய தேர்தல் முறைமையை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது ஏன் ? புதிய தேர்தல் முறைமையை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது ஏன் ? Reviewed by Vanni Express News on 7/27/2018 05:47:00 PM Rating: 5