முகப்புத்தகத்தில் காதல் - கோடீஸ்வரின் மகளை கடத்திய காதலன் கைது - நீர் கொழும்பில் சம்பவம்

வர்த்தகர் ஒருவரின் மகளை முகப்புத்தகம் வாயிலாக நட்பு கொண்டு காதலிப்பதாக தெரிவித்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த சம்பவம் நீர் கொழும்பில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு நேற்றைய தினம் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஒருவரே, கோடீஸ்வர வர்த்தகரின் மகளை காதலிப்பதாக கடத்திச் சென்றுள்ளார்.

குறித்த யுவதியை பார்க்கவேண்டும் என அழைத்து, அவரை ஒரு அறையில் அடைத்து விட்டு தந்தைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பணம் கோரியுள்ளார்.

இதனையடுத்து தந்தை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் தந்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

நேற்றைய தினம் வழமைக்கு மாறாக மகள் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக சென்றார். ஆனால் மாலையாகியும் அவர் வீடு திரும்பவில்லை. நாங்கள் உறவினர்கள் அயலவர்கள் என அனைவரிடத்திலும் கேட்டு விசாரித்தோம். 

மகள் வரவில்லை என தெரிவித்தார்கள். 

அந்த சந்தர்ப்பத்தில் தான் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 

உன்னுடைய மகள் என்னிடத்தில் பாதுகாப்பாக இருக்கின்றாள். 

நாங்கள் கேட்கும் பணத்தினை தந்து விடு இல்லையென்றால், மகளை கொன்று விடுவோம் என அச்சுறுத்தினார்கள் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முகப்புத்தகம் மூலமே இருவரும் பழகியுள்ளனர்.

பணத்திற்காகவே காதலிப்பதாக நடித்துள்ளார் குறித்த 25 வயதுடைய இளைஞர்.

இதனை தொடர்ந்து தொலைபேசி அழைப்பு வந்த இலக்கத்தினை பெற்றுக்கொண்ட காவற்துறை, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் கட்டுபாட்டு ஆணைக்குழுவின் உதவியுடன், யுவதியை தடுத்து வைத்திருக்கும் இடத்தினை கண்டறிந்துள்ளனர்.

இரகசியமான முறையில் குறித்த இடத்தை சுற்றிவளைத்த காவற்துறை, யுவதியை மீட்டதோடு நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்புத்தகத்தில் காதல் - கோடீஸ்வரின் மகளை கடத்திய காதலன் கைது - நீர் கொழும்பில் சம்பவம் முகப்புத்தகத்தில் காதல் - கோடீஸ்வரின் மகளை கடத்திய காதலன் கைது - நீர் கொழும்பில் சம்பவம் Reviewed by Vanni Express News on 7/02/2018 12:38:00 AM Rating: 5