முதலாவது ஹஜ் குழுவினர் புனித மக்காவுக்கு நேற்று பயணம்

-ஐ. ஏ. காதிர் கான் 

இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக, 150 பேர் கொண்ட முதலாவது ஹஜ் குழுவினர், நேற்று (24) செவ்வாய்க்கிழமை மாலை 5.54 மணிக்கு, புனித மக்காவுக்குப் பயணமாகினர்.

இக்குழுவினரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். மலிக், அரச ஹஜ் குழுத் தலைவர் கலாநிதி எம்.ரி. ஸியாத் உள்ளிட்ட குழுவினர் வழி அனுப்பி வைத்தனர்.

இதேவேளை, 300 ஹஜ் யாத்திரிகர்களைக் கொண்ட இரண்டாவது ஹஜ் குழுவினர், நாளை (26) வியாழக்கிழமை, புனித மக்காவுக்குப் பயணிக்கவுள்ளனர்.

இது தவிர, புனித மக்காவுக்குச் செல்லும் ஹஜ் யாத்திரிகர்கள், தம்முடன் தடை செய்யப்பட்ட மருந்து வகைகளை, சவூதி அரேபியாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வருடம் இலங்கையிலிருந்து மூவாயிரம் ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்காவுக்குச் செல்வதற்காகத் தெரிவாகியுள்ள நிலையில், இவர்கள் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அங்கு பயன்படுத்துவதற்காக, ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியுலர் ஜெனரல் ஏ.டப்ளியூ.ஏ. சலாம், 3 ஆயிரம் சிம் அட்டைகளை குறித்த திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இச் சிம் அட்டைகள் ஹஜ் முகவர்கள் ஊடாக ஹஜ் யாத்திரிகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும், திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் மலிக் தெரிவித்துள்ளார்.
முதலாவது ஹஜ் குழுவினர் புனித மக்காவுக்கு நேற்று பயணம் முதலாவது ஹஜ் குழுவினர் புனித மக்காவுக்கு நேற்று பயணம் Reviewed by Vanni Express News on 7/25/2018 11:41:00 PM Rating: 5