கல்வித்துறையின் தர மேம்பாட்டுக்காக புதிய சட்ட திட்டங்கள் - பிரதமர் ரணில்

எந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் பாடசாலைகளுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தில் கல்வி அமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தகைமையுள்ள ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் பெற்றோருக்குள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி கிங்தொட்ட ஷாஹிரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று கட்டடங்களைத் திறந்து வைத்து மற்றுமொருகட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் நேற்று கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கடந்த காலத்தில் மாணவர்கள் அல்லது பாடசாலைகளின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பவே பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பாடசாலைக் கல்வி பெரும் பாதிப்புக்கு இலக்கானது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தாம் கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் பரீட்சை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஸ்தாபிக்கப்பட்டது. எனினும், அரசியல் இலாபம் கருதி செயற்பட்ட சிலரால் இன்று பலபாடசாலைகளில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கடமையாற்றியதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பட்டதாரி பாடசாலை ஆசிரியராக நியமிக்கப்பட்டாலும் அவர் முறையான பயிற்சி பெறுவது அவசியம். சீர்குலைந்துள்ள பயிற்சி நிறுவகங்களை மறுசீரமைத்து அவற்றை முறையாக இயங்கச் செய்வது கட்டாயமானது. கல்வித்துறையின் தராதரத்தை மேம்படுத்துவதற்காக புதிய சட்ட திட்டங்களை அமுலாக்க வேண்டுமென பிரதமர் மேலும் தெரிவித்தார்.
கல்வித்துறையின் தர மேம்பாட்டுக்காக புதிய சட்ட திட்டங்கள் - பிரதமர் ரணில் கல்வித்துறையின் தர மேம்பாட்டுக்காக புதிய சட்ட திட்டங்கள் - பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 7/31/2018 04:45:00 PM Rating: 5