பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி அமைச்சர்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 

இந்த தீர்மானம் மீது கடந்த 20 ஆம் திகதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார். 

ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14 ஆவது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி அமைச்சர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

எனவே பிரதமர் மோடிக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி அமைச்சர்கள் திட்டமிட்டு உள்ளனர். 

முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் Reviewed by Vanni Express News on 7/26/2018 05:35:00 PM Rating: 5