இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம்

-ஊடகப்பிரிவு

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம். சீன நிறுவனம் ஆரம்ப பணிக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்

நவீன தங்க, ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு தாம்தயாராகி வருவதாக சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குரூப் முன்வந்துள்ளதுடன சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை விரிவுபடுத்த இது பெரிதும் உதவுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷங்காய் தங்க பறிமாற்ற நிறுவனத்துக்கு பக்க பலமாக நின்று, உலகியேயே பௌதீக ரீதியான பிரமாண்டமான தங்கப் பரிமாற்ற நிலையமாக ஷங்காய் நிறுவனத்தை மாற்றியுள்ள இந்த நிறுவனத்தின் தலைவரான சூ யூச்சின்இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை நேற்று (24) சந்தித்த போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன் இதன் மூலம் இலங்கையில் தங்க மற்றும் ஆபரணம் இரத்தினக்கல் பங்குச் சந்தையின் பெறுமானம் மேலும் அதிகரிக்குமெனவும் குறிப்பிட்டார். அத்துடன் சீன உல்லாசப்பயணிகளுக்கு இந்த நிர்மாண முயற்சி பெரிதும் பயனளிக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது சீனாவின் சன் மெங்சியோ நகரின் உதவி மேயர் சன் ஜிவி உட்பட சீனாவின் முன்னணி வர்த்தகர்களும் பங்கேற்றிருந்தனர். இலங்கையைச் சேர்ந்த றம்சீன் பாச்சா இரத்தினக்கல் மாளிகையின் பணிப்பாளர் எம்.என்.எம்.றம்சீனும் இதில் பங்கேற்றிருந்தார்.

சீனாவின் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட அதாவது 100 மில்லியனுக்கு மேலான மக்கள் தொகையைக் மாநிலமான கெனன் மாநிலத்தை தளமாகக்கொண்டியங்கி வரும் அரசாங்கத்துக்கு சொந்தமான சேன் மெங்சியோ ஜிங்கு குரூப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டமையை அமைச்சர் றிஷாட் பாராட்டினார்.

ஹெனன் மாநிலத்துக்கு அருகிலுள்ள சண்டோங் மாநிலத்திலேயே கடந்த வருடம் மார்ச் மாதம் சீனாவின் பிரமாண்டமான தங்கச் சுரங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது.

'சீனாவின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இலங்கை விநியோகஸ்தரான பாச்சா ஜெம்ஸ் உடன் கடந்த பல வருடங்களாக வியாபாரத்தில் பங்காளராக நாம் இருக்கின்றோம.' குறித்த திட்டத்தில் இலங்கை அரசு, பாச்சா இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் மற்றும் சேன் மெங்சியோ ஜிங்கு குரூப் நிறுவனம் ஆகிய மூன்றும் பங்காளராகின்றது. இத்திட்டத்தின் முதலாவது கட்டத்துக்கு 30 'மில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் முதலீடு செய்கின்றோம்.' என்றும் நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

'ஆரம்பத்தில் பல மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்று நவீன அம்சங்களுடன் நிர்மாணிக்கப்படும். அந்த கட்டிடத்தொகுதியில் தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக் கல் விற்பனை நிலையங்கள்,இலங்கையில் உள்ள வங்கிகளின் கிளைகள், வெளிநாட்டு பணப்பரிமாற்ற நிலையங்கள் சீன உணவுச்சாலைகள் உட்பட பல நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.' இவ்வாறு அந்த நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கருத்து தெரிவித்த போது இலங்கையில் குறித்த நிறுவனமானது இவ்வாறானதொரு பாரிய முயற்சியை மேற்கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதென்றும் இந்த நிறுவனத்தின் பிரவேசமானது இலங்கையின் தங்க ஆபரணம் மற்றும் நகைத்துறையில் உயர்வான போட்டித் தன்மையை ஏற்படுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார். பாச்சா ஜெம் நிறுவனத்தின் வியாபார முயற்சியை பாராட்டிய அமைச்சர், நவீன இக்கேந்திர நிலையம் அமைக்கும் இப்பாரிய செயற்பாட்டிற்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சும் உத்தியோகபூர்வ பங்களாராகுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் நிதியமைச்சருடனும் உயர் மட்ட கலந்துரையாடல்நடத்தப்பட்டு இந்த அரிய முயற்சியை முன்கொண்டு செல்ல தமது அமைச்சு உதவுமெனவும் குறிப்பிட்டார். அத்துடன் இத்திட்டமானது எமது நாட்டில் தங்க மற்றும் ஆபரண ஏற்றுமதியை மேலும் உயர்த்தும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம் இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையம் Reviewed by Vanni Express News on 7/26/2018 01:38:00 AM Rating: 5