மாகாணசபை தேர்தல் நடக்குமா.?

-எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை.

இந்த நல்லாட்சி அரசாங்கம் பல திட்டங்களை வகுத்தே மஹிந்தவின் அரசாங்கத்தை கைப்பற்றிக்கொண்டது மட்டுமல்ல, இதற்காக டயஸ்போராக்கள் தொடக்கம் மேற்குலக சக்திகளின் உதவிகளும் பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டாலும் பின்னாலில் மக்கள் சக்தி எமக்கு எதிராகவே இருக்கின்றது என்று அறிந்து கொண்ட நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயக ரீதியில் உரிய காலத்தில் நடத்தவேண்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் ஏதேதோ காரணங்களைச் சொல்லி காலங்களை கடத்தி வந்தது.

எந்த தேர்தல் வந்தாலும் மஹிந்தவின் கை ஓங்கிவிடும் என்று பயந்த நல்லரசாங்கம், உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் பின்கதவால் ஆட்சியை பிடித்துவிடவேண்டுமென்ற திட்டத்தை வகுத்துக் கொண்டு தேர்தலை நடத்தினார்கள். அந்த தேர்தல் முடிவுகள் நல்லாட்சிக்கு பேரிடியாகவே அமைந்து விட்டது. அதன் தாக்கங்களும் அதனால் ஏற்பட்ட மனவருத்தங்களும் இன்றும்கூட அவர்களுக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் மாகாணசபைகள் தேர்தல்களும் நடந்தால், நல்லாட்சி அரசாங்கம் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடவேண்டி ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக, பல காரணங்களைக் கூறி மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் தாமதப்படுத்தி வருகின்றார்கள் என்பதே உண்மையாகும். இந்த நாடகத்துக்கு அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றார்கள். இந்த விடயத்தில் தமிழ் கட்சிகளின் நோக்கம் மிகத்தெளிவாகவே தெரிகின்றது எனலாம். அவர்களுக்கு இந்த அரசாங்கத்தினூடாக எப்படியாவது அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுவிடவேண்டும் என்பதே இலக்காகும். 

ஆனால் முஸ்லிம் கட்சிகளின் நோக்கம் வேறானது, இந்த ஆட்சியின் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, தங்களுடைய கஜானாக்கள் நிரம்பிவிடவேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் கிந்தோட்டை, அம்பாரை, திகன போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்களைக் கண்டும் காணாதவர்கள்போல் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கொண்டே அறிந்து கொள்ளலாம் இவர்களின் நோக்கம் என்னவென்று.

இந்த நிலையில் மாகாணசபை தேர்தலை உரியகாலத்தில் நடத்தாமல் இருப்பதற்காகவே 20வது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தார்கள். அதுவும் நீதிமன்ற தீர்ப்பினால் தடைசெய்யப்படவே, அவசர அவசரமாக மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டம் என்ற போர்வையில், ஏற்கனவே பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு செயல்படாமலிருந்த 25வீத பெண்களும் தேர்தலில் பங்குபற்றவேண்டும் என்ற சட்டதிருத்தத்துக்குள் ஏதேதோ சட்டங்களைத் திணித்தது மட்டுமல்ல, காலையில் கொண்டுவந்து மாலையில் நிறைவேற்ற முற்பட்டபோது, நமது முஸ்லிம் தலைமைகள் செய்வதரியாது திண்டாடிப்போனார்கள். இந்த தேர்தல் திருத்தச்சட்டத்தை முழுமையாக படித்தறிவதற்கு கூட அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில் ஆளுங்கட்சியால் இவர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது மட்டுமல்ல, இந்த தேர்தல் சட்டதிருத்தத்தில் பிழைகள் இருந்தால் பிறகு பார்ப்போம், தற்போதைக்கு இதனை நிறைவேற்ற உதவி வழங்குங்கள், அப்படி இந்த திருத்தச்சட்டம் நிறைவேறாமல்போனால் தேர்தலை உரிய காலத்தில் நடத்தவேண்டிவரும். அப்படி உரிய காலத்தில் தேர்தல் நடந்தால் நிச்சயமாக மஹிந்த அணியினர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வார்கள் இதனால் நல்லாட்சி அரசாங்கம் தடம்புரண்டு விடும், அதனால் உங்களுக்கும் ஆபத்துவரும் என்ற காரணத்தைக் காட்டியே இந்த தீர்மானத்துக்கு அவர்களின் ஆதரவு பெறப்பட்டது என்பது அவர்களின் தற்போதைய வாய்முறைப்பாட்டை வைத்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

மாகாணசபை தேர்தல் மூலம் மஹிந்த அணியினர் ஆட்சியை கைப்பற்றினால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலோ அல்லது பொதுத்தேர்தலிலோ அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதோடு, இந்த தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் மொட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் மஹிந்த அணியினருக்கு மிகவும் உறுதியாக செயல்படுவார்கள். இந்த நிலைமை எதிர்காலத்தில் நல்லரசாங்கத்துக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும், அதனால்தான் 2019 இறுதியில் நடக்கவிருக்கும் தேர்தல்கள் வரை மாகாணசபை தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதே இவர்களின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே தேர்தலை புதியமுறையில் நடத்துவோம் என்று மைத்ரி அணியும், தேர்தலை பழய முறையில் நடத்துங்கள் என்று ஏனைய அணியினரும் முரண்பட்டுக் கொள்வதைப்போன்று ஆடும் நாடகமாகும்.

உண்மையிலேயே தேர்தலை உரிய நேரத்தில் நடத்தும் என்னம் அவர்களுக்கு இருந்திருந்தால், இந்த தேர்தலை பழயமுறையில் நடத்துவதற்கு தடையாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரி அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இரவிலேயே தீர்வுக்கு வரமுடியும். ஆனால் அப்படி அவர்கள் நடந்துகொள்ளாமல் வேறு விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதானது அவர்களின் ஏமாற்று வித்தையே என்பதில் எவ்வித ஐயமும் கொள்ளத்தேவையில்லை.

இதன் காரணமாகத்தான் சொல்லுகின்றோம், மாகாணசபை தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்பது சந்தேகம் என்பதுதான் உண்மையாகும்.
மாகாணசபை தேர்தல் நடக்குமா.? மாகாணசபை தேர்தல் நடக்குமா.? Reviewed by Vanni Express News on 8/05/2018 10:31:00 PM Rating: 5