திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர பல மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதிமுக செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன், “மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள ரஜினிகாந்த், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் Reviewed by Vanni Express News on 8/08/2018 12:01:00 AM Rating: 5