ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை

-பாறுக் ஷிஹான்

திருகோணமலை சம்பூர் பகுதியில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 

இந்த வழக்கு விசாரணை இன்று (07) திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களில் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியையை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 38 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் 27 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 32 வயதுடைய கிறிஷ்னபாலன் ரஜீவ்காந்தன், 27 வயதுடைய சிவகுமார் சிவரூபன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2011 ஆண்டு 11 மாதம் 24 ஆம் திகதி சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாட்டாளிபுரம், சந்தோசபுரம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் குறித்த ஆசிரியை கொலை செய்யப்பட்டிருந்தார். 

குறித்த பகுதியிலுள்ள வயல் வௌிக்கு அருகில் காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இக்கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சம்பூர் பொலிஸார் 4 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர். 

கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் உடம்பில் 13 இடங்களில் காயங்கள் காணப்பட்டுள்ளதாகவும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை Reviewed by Vanni Express News on 8/07/2018 04:49:00 PM Rating: 5