மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை

பங்களாதேஷில் பாதுகாப்பு விதிகளைக் கடுமையாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அந்த நாட்டு அரசு அடக்குமுறையைக் கையாண்டதாக சர்வதே மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இதுகுறித்து அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்´ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பங்களாதேஷில் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தடியைக் கொண்டும், அரிவாளைக் கொண்டும் கடுமையான தாக்குதல் நிகழ்த்தியுள்னர். 

செய்தி சேகரிக்க வந்திருந்த ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், தவறான செய்திகளை பரப்பியதாக புகைப்பட கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரு பேருந்துகள் போட்டி போட்டு ஓட்டிச் சென்றதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உட்பட இரு இளம் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இதையடுத்து, இரு பேருந்துகளை போட்டி போட்டு ஓட்டிச் சென்ற ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், நாட்டில் அடிக்கடி நடந்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டாக்காவில் மாணவர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் தொடர்ந்து 8 நாள்களுக்கு நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்தன. 

இந்தச் சூழலில், போராட்டம் மேலும் தீவிரமடைந்து வன்முறை வெடித்து, பொலிஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக் குண்டு வீச்சிலும், தடியடியிலும் பலர் காயமடைந்தனர். 

இந்த நிலையில், மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, விபத்துகளால் உயிரிழப்புகளை ஏற்படுத்துவோருக்கான தண்டனையைக் கடுமையாக்கும் புதிய சட்டத்துக்கு அந்த நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை Reviewed by Vanni Express News on 8/08/2018 05:04:00 PM Rating: 5