2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

-க.கிஷாந்தன்

பெருந்தோட்ட மக்களை தவிர்ந்த ஏனைய மக்கள் கிராமத்தில் வாழ்கின்றனர். நான் ஆட்சிக்கு வந்தால் பெருந்தோட்ட மக்களுக்கு கிராமங்களை உருவாக்கி வாழ வைப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலவாக்கலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு உறுதியளித்தார். அவர் உறுதியளித்தவாறு இன்று கிராமத்தில் மக்களை வாழ வைப்பதற்கு அவரின் உறுதி ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

மலையகத்திற்கு இன்று முக்கியமான நாள். நமது லயம் என்ற அடையாளம் மாற்றம் பெற்று புதிய கிராமத்தில் வாழ்வதற்கு வித்திட்ட நாள். இது வரை காலமும் லயம் என்ற அடையாளத்தோடு வாழ்ந்த இம்மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக தனி வீடுகள் அமைத்து கிராமமயத்தில் வாழும் ஓர் நல்ல நாள் நமக்கு உதயமாகியுள்ளது. இது நமது வீடு நமது இடம் என சுதந்திரமாக வாழக்கூடிய வசதியை ஏற்படுத்திய இந்த நாள் பொன்னான நாளாகும்.

இதற்கு இலங்கை மற்றும் இந்திய பிரதமர்கள் மற்றும் இந்நாட்டின் அரசாங்கத்திற்கும் நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மலையக மக்களுக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது என தெரிவித்த அமைச்சர் மக்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்கினால் இதையும் கட்டி முடிப்போம் எனவும் தெரிவித்தார்.

2012ம் ஆண்டு இந்திய வீடமைப்பு திட்டம் இலங்கைக்கு கொண்டு வந்து போதிலும் நான்கு வருடங்களாக நடவடிக்கைககள் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் 2015ல் ஆட்சிக்கு வந்த நான் நடவடிக்கை எடுத்து இந்த வீட்டு திட்டத்தை ஆரம்பித்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சுதந்திரத்தோடு, வாழக்கூடிய எம்மக்கள் இத்திட்டத்தை அமுல்ப்படுத்திய எமக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர் சிங்கள மொழியில் உரையாற்றுகையில்,

நாட்டில் பிரதமரை மாற்ற வேண்டும் எனவும், எதிர்கட்சி தலைவர் பதவிக்கு போட்டிகள் நிலவும் இச்சந்தர்ப்பத்தில் 2020ம் ஆண்டு வரை இந்த அரசாங்கத்தை அசைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. 2020ல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என உறுதியுடன் தெரிவித்தார்.
2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு 2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு Reviewed by Vanni Express News on 8/12/2018 11:18:00 PM Rating: 5