சாணாக்கியனை ஆண்டவனாக்கும் மூடப் போராளிகள்

-எ.முஹம்மட் றிசாத்

“யானை குழிக்குள் விழுந்தால் எறும்பும் சுகம் விசாரிக்கும் என்பார்கள்" இந்தக் கதையை இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சட்டத்தரணியான பிரதி அமைச்சருக்குப் பொருத்தமாகப் பார்க்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களைப் பொறுத்தவரை எக்காலத்துக்கும் இக்கதை பொருந்தும். சந்தர்ப்பம் பார்த்து ஏவம் கேட்போரின் மனக் குமுறல்களை வெளிப்படுத்துவதற்கே இக்கதை கட்டப்பட்டுள்ளது. மலைபோன்ற யானையின் பார்வைக்குள் எறும்பு புலப்படுவதில்லை. நிறத்தில் இரண்டும் கருமைதான். ஆனால், உருவத்தில், பலத்தில் இவையிரண்டையும் எடை போடவோ, ஒப்பிடவோ முடியாது.

விவாதங்களில் கலந்துகொண்ட பிரதியமைச்சரின் சிந்தனையில் கட்சியின் கோட்பாடு பற்றிய தெளிவின்மையையும், ஏன் அவர் சார்ந்த கட்சிக்கே முஸ்லிம் சமூகம் வியாபாரப் பொருளாக மாறி உள்ளதையும் அவதானித்த இளம் ஊடகவியலாளர் குடைந்து குடைந்து கேள்விக்கணைகள் தொடுத்துள்ளார். சட்டத்தரணி என்பதால் சட்டெனப் பதிலளிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் சட்டெனத் தடுமாறிய பிரதியமைச்சர் சங்கடத்துக்குள்ளானமை முஸ்லிம் காங்கிரஸின் வெறுமையை வெளிப்படுத்தியது. இதில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக இன்னுமொரு அரச தொலைக்காட்சிக்கு சென்ற பிரதியமைச்சரின் பிரதிபலிப்புக்கள், குறித்த ஊடகவியலாளரைப் பழிதீர்ப்பதாகவே இருந்தது. 

இத்தனைக்கும் எத்தனையோ முக்கியமான அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படும் காலத்தில், கேவலம் இதையா பேசுவதென்று மக்கள் முகம் சுழித்துக் கொண்டனர். போதாக்குறைக்கு பிரதியமைச்சர் சட்டத்தரணியின் இரட்டை வேடத்தையும், இரு நாக்குக் கூற்றுக்களையும் ஊடகவியலாளர் உலகுக்கு வெளிப்படுத்தினார். வெளியில் தலைமையைக் கவிழ்க்கும் கபடப் பேச்சு, தாருஸ் ஸலாமில் தலைமையைப் போற்றும் பக்திப் பேச்சு, இதுதான் முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களின் உயிர் மூச்சு.

பிரதியமைச்சரின் முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய பார்வையே தன்னை அமைச்சர் ரிஷாதின் பக்கம் அழைத்துச் சென்றதாகவும் ஊடகவியலாளர் கூறுகிறார். அவ்வாறானால் இதற்கு முன்னர் இவரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவே தனது ஊடக தர்மத்தைப் பாவித்திருப்பார். இதிலுள்ள வியப்பு இவ்விளம் ஊடகவியலாளரை பிரதியமைச்சரே கட்சி மாறச் செய்துள்ளார். 

உள்ள வாக்காளர்களை அதிகரிப்பதை விடவும் உள்ளதையும் இழக்கச் செய்யும் தொழிலையே மு.கா எம்பிக்கள், பிரதியமைச்சர்கள் செய்கின்றனர். இதுதான் இன்று தனித்துவ தலைமைக்கு ஏற்பட்டுள்ள தலையிடி. “வேலியே பயிரை மேயும் நிலை” இந்தக் கட்சிக்கு விளக்குப் பிடிப்பதைப் போல் இன்னுமொரு போராளி அவரை “நோயாளி” என்று அழைப்பதே பொருத்தம்.

கிழக்கின் இயற்கை வளங்கள் அத்தனையையும் சாணாக்கியத் தலைவரின் சாதனை என்கிறார். கிழக்கிலுள்ள பட்டதாரிகள், வைத்தியர்கள், பொறியியலாளர், கல்விமான்கள், குளங்கள், நதிகள், கடல்கள், காடுகள் அத்தனையும் சாணாக்கியத் தலைவரின் படைப்புக்களாம். நன்றாக உள்ளது கட்சி விசுவாசம். கட்சித் தலைவரை ஆண்டவனாக்கிப் பார்ப்பதில் அந்தப் போராளிக்கு (நோயாளி) ஒரு ஆசை. இத்தனை பக்தியுள்ள கட்சி விசுவாசிக்கு பிரதி அமைச்சர் பதவி கொடுப்பதுதானே பொருத்தம். 

தலைவர் இதிலும் தவறு விட்டுள்ளதாகவே தோன்றுகிறது. வடக்கிற்கு வந்து பார்த்தால் ரிஷாதின் ஆளுமைக் கோட்டைகளில் எத்தனை ஆத்மாக்கள் வாழ்கின்றன என்பது பற்றிப் புரியும். 

அத்தனையும் அடி மட்டத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்ட அபிவிருத்திகள். பௌத்த கடும்போக்குவாதத்தின் எதிர்ப்பையும் கடந்து, தமிழ் பெரும்பான்மைவாதிகளின் புலிச்சிந்தனையை எதிர்த்து எழுப்பப்பட்டுள்ள வாழ்வாதார முயற்சிகள், மீள்குடியேற்றம், இருப்புக்களை உறுதிப்படுத்தும் முஸ்லிம் தேசிய ஆவணங்கள், எஞ்சிய உரிமைகளை வெல்வதற்காக ரிஷாத் வகுத்துள்ள வியூகங்கள் இவற்றைக் கண்ணால் கண்டு வியந்துள்ளனர் அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்த ஊடக வியலாளர்கள். இதில் இந்த இளம் ஊடகவியலாளரும் கவரப்பட்டுள்ளார். இதுதான் யதார்த்தம்.

பிரதேசவாதத்திலிருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் சிந்தனைப் போரில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று சுயநலப்போக்கில் சமூகத்தை விட்டுத் தூரமாவதைப் பலர் துல்லியமாக உணர்ந்து கொண்டனர். இது முன்னுக்குப்பின் முரணாகப் பேசி கட்சியை வீழ்த்தக் காத்திருப்போரின் சகவாசத்தை விட, சமூகத்தின் மீள்எழுச்சிக்காகப் போராடும் வடபுலத் தலைமை எவ்வளவோ மேலானது என்பதை உணர்த்தியுள்ளது இவ்விளம் ஊடகவியலாளருக்கு.

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது அதில் அர்த்தமுள்ளது"
சாணாக்கியனை ஆண்டவனாக்கும் மூடப் போராளிகள் சாணாக்கியனை ஆண்டவனாக்கும் மூடப் போராளிகள் Reviewed by Vanni Express News on 9/12/2018 02:34:00 PM Rating: 5