முஸ்லிம் தனியார் சட்டம் - பாகம் 1 பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு

-வை எல் எஸ் ஹமீட்

முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும்; என்ற கோரிக்கை நீண்டகாலமாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. திருத்தப்படுவதில் பிரச்சினையில்லை. ஆனால் திருத்தப்படவேண்டிய குறைபாடுகள் என்ன? அந்த திருத்தங்கள் யாருக்குத் தேவை? அத்திருத்தம் செல்லக்கூடிய எல்லை என்ன? என்பவைதான் இங்கு  பிரதான கேள்விகளாகும்.

நாம் முஸ்லிம்கள். ஆனாலும் இது முஸ்லிம் நாடல்ல. எனவே சரீஆ சட்டம் அமுலாக்கப்பட முடியாது. இருந்தாலும் டச்சுக்காரர் காலத்தில் இருந்து ஒரு சிறிய சலுகை. அதுதான் உங்கள் திருமண,விவாகரத்து விவகாரம், மற்றும் வாரிசுரிமை போன்றவற்றில் உங்கள் சரீஆவைப் பின்பற்றுங்கள் என்பது.

இதனை சில மேற்கத்திய சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, இச்சட்டம் ஆண்-பெண் பாகுபாட்டைக் கொண்டது. சர்வதேச மனித உரிமைகளுக்கு முரணானது. நீதியற்றது. எனவே, திருத்தங்கள் செய்யவேண்டும்; என கோசமெழுப்புகின்றார்கள். இவற்றிற்காக சில N G O க்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த NGO க்களின் வரப்பிரசாதத்திற்காக அவற்றின் வலைகளுக்குள் அகப்பட்டிருக்கின்ற சில முஸ்லிம் பெண்ணியவாதிகள் அவர்களுடன் சேர்ந்து குரலெழுப்புகிறார்கள்.

இவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளும் வேண்டும் தீர்வுகளும்
——————————————————————-
பிரதானமானவை

பிரச்சினை-1
ஆண் காதிகளால் விவாகரத்து வழக்கிற்கு செல்லும் பெண்கள் பல சந்தர்ப்பங்களில் அகௌரவமாக நடாத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை.
கோரப்படும் தீர்வு: எனவே பெண் காதிகளும் நியமிக்கப்பட வேண்டும். பெண் காதிகள் நியமிக்கப்படாமல் இருப்பது பாகுபாடானது. ( discrimination) அது மனித உரிமைக்கு முரணானது.

பதில்

ஆண் காதிகள் நியாயமற்ற முறையில் அல்லது அகௌரவமான முறையில் பெண்களை நடாத்துகிறார்கள்; என்பதில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை. அதேநேரம் இக்காதிகள் சிலர் பெண்களுக்கு சாதகமாகவே நடக்கின்றனர்; என்ற குற்றச்சாட்டுக்களும் இல்லாமலில்லை.

இவற்றிற்கு காரணம் பல சந்தர்பங்களில் காதி நியமனங்கள் பொருத்தமற்றவையாக அமைவதாகும்.
பொருத்தமான உலக, மற்றும் மார்க்க கல்வி தராதரம், ஒழுக்கம், கண்ணியமான நடத்தை, மார்க்க ஈடுபாடு போன்றவை உள்ளவர்கள் காதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம் இவ்வாறு தகுதியானவர்கள் முன்வருவதற்கு கௌரவமான கொடுப்பனவு, மற்றும் வசதிகள் வழங்கப்படவேண்டும். இவை எதுவுமில்லாமல் பொருத்தமானவர்களை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். பொருத்தமற்றவர்களிடம் எவ்வாறு தகுதியான சேவையை எதிர்பார்க்க முடியும்.

எனவே, பிரச்சினையை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வுகாணாமல் தீர்வை வேறு எங்கோ தேடுவது எந்த வகையில் தீர்வைத் தீரும்.

பெண் காதி நியமனம்
—————————
மார்க்க நிலைப்பாடு ஒரு புறமிருக்க, இதற்குத் தீர்வாக பெண்காதிகளை நியமிக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தில் நூறு வீதம் பெண் காதிகளை நியமிக்கக் கோருகின்றார்களா? ஏனெனில் உதாரணமாக 50% பெண் காதிகளை நியமித்தால் அடுத்த 50% மான ஆண் காதிகளிடம் செல்லுகின்ற வழக்குகளில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதா? எனவே, இந்தக்கோரிக்கை தீர்வை நோக்கியதல்ல. மாறாக உள்நோக்கம் கொண்டது.

பாகுபாடு
————-
ஆண்களும் பெண்களும் சமம். பாகுபாடு மனித உரிமை மீறல். இந்தக்கோசத்தை இவர்களுடன் இணைந்து எழுப்புபவர்கள் அந்நிய பெண்கள். அதாவது முஸ்லிம் சட்டம் திருத்தப்பட வேண்டுமென போராடும் முஸ்லிம் பெண்கள் தங்கள் போராட்டத்திற்கு துணையாக அழைப்பது கலிமாச் சொல்லாதவர்களை.

உண்மையில் இவர்களின் போராட்டத்திற்கு அவர்கள் உதவவில்லை. மாறாக, இலங்கையில் மார்க்க விடயத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இந்த சிறிய சலுகையையும் அழித்துவிடுவதற்கான மேற்கத்திய சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் சதிப்போராட்டத்திற்கு நமது சில பெண்களும் துணைபோகிறார்கள். அவ்வளவுதான்.

இன்று முஸ்லிம் சமூகத்தின் துரதிஷ்டவசமான நிலைமை என்னவென்றால் அரசியல்வாதிகள் ஒருபுறம் தாங்கள் வாழ்வதற்காக சமூகத்தை சீரழிக்கிறார்கள். மார்க்கம் படித்தவர்கள் என்கின்ற ஒரு கூட்டம் இயக்கங்களின் பெயரால் உம்மத்தை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். NGO க்களின் வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகி இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒரு சிறிய சலுகையையும் துவம்சம் செய்ய ஒரு கூட்டமும் முனைகிறார்கள்.

சமத்துவம் ( equality) என்பது எல்லோரையையும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி நடத்துவல்ல. அது சாத்தியமில்லை. ஏனெனில் எல்லோரும் எல்லா விடயங்களிலும் ஒரேமாதிரியானவர்களாக இல்லை. அவ்வாறு இறைவன் படைக்கவும் இல்லை. எனவே, சமத்துவமற்றவர்களை சமத்துவமாக நடத்துவது என்கின்றபோது ‘ சமத்துவம்’ என்றால் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

இதற்குரிய விடையாக ‘ சமத்துவம்’ என்ற சொல்லின் பொருள் தொடர் மாற்றத்திற்குள்ளாகிக்கொண்டு அல்லது விரிவடைந்துகொண்டு செல்கின்றது. ஒரு காலத்தில் ஒரே சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இடையில்தான் ‘ பாகுபாடு’ பற்றிப்பேசலாம். ( equally circumstanced) என்று கருதப்பட்டது.

இன்று அதைவிட ஒரு படிமேலே போய் formal equality, substantive equality ஆகியவை பற்றிப் பேசுகிறார்கள். இருவரும் சமம் என்று ஒரேவிதத்தில் நடாத்துவது formal equality. இருவரும் சமமற்றவர்கள். எனவே, பலத்தில் அல்லது தன்மையில் குறைந்தவருக்கு மேலதிக சலுகைகளை வழங்கி அவர்களை சமப்படுத்துவது substantive equality.

பெண்ணியவாதிகள் சில விடயங்களில் formal equality யைக் கோருகின்றார்கள். சில விடயங்களில் substantive equality யைக் கோருகின்றார்கள். மறுவார்த்தையில் கூறுவதானால் சில விடயங்களில் equal treatment கேட்கின்றார்கள். சில விடயங்களில் differential treatment கேட்கின்றார்கள். எனவே ஆண்களும் பெண்களும் எல்லாவிடயங்களிலும் சமமல்ல என்பதுதான் அவர்களின் நிலைப்பாடுமாகும். அதுதான் இயற்கையின் நியதியுமாகும். இது அடிப்படையில் ஆணும் பெண்ணும் மனிதன் என்ற முறையில் சமம் என்ற கோட்பாட்டிற்கு முரணானதல்ல.

எங்கு பிரச்சினை எழுகின்றது என்றால் எந்த விடயத்தில் ஆணும் பெண்ணும் சமம்; எந்தவிடயத்தில் வித்தியாசம்; என்பதில்தான். இங்குதான் நமது முஸ்லிம் பெண்ணியவாதிகள் படைத்தவனின் அறிவோடு போட்டிபோடுகிறார்கள்.

பெண்காதி நீதிபதியாக வரமுடியாது; என்பது சரீஆ நிலைப்பாடு என்றால் பெண் இதற்குப் பொருத்தமில்லை; என்பது படைத்தவனின் நிலைப்பாடாகும். அந்த இறைவனை ஏற்றுக்கொண்ட நம் பெண்ணியவாதிகள் கூறுகிறார்கள் மனித உரிமைக்கோட்பாட்டின்படி அதனை ஏற்றுக்கொள்ள முடியாது; என்று.

இதற்கு அவர்களுக்கு துணைநிற்பது இஸ்லாத்தையே ஏற்றுக்கொள்ளாதவர்கள்.

இவர்களுக்கு சரிஆ வை விட மனித உரிமைக்கோட்பாடு முக்கியமாக இருக்கலாம். அதற்காக மொத்த முஸ்லீம்களும் அதற்கு உடன்பட வேண்டுமா?

குர்ஆன், ஹதீஸில் உள்ள விஞ்ஞான உண்மைகள் இன்று ஒவ்வொன்றாக நிறுவப்பட்டுக்கொண்டு வருகின்றன. நாளை, ஏன் இரு பெண்களை ஒரு ஆணின் இடத்திற்கு சாட்சி சொல்ல இஸ்லாம் கோருகின்றது; காதியாக வருவதை ஏன் தடுக்கின்றது; என்பனகூட நிறுவப்படலாம்.

எனவே, படைத்தவனின் சட்டத்தை நீங்கள் பிழைகாணுகிறீர்கள் என்பதற்காக மொத்த முஸ்லிம்களும் வழிகெடுக்கப்பட முடியாது.

இஸ்லாமிய சட்டத்தில் திருத்தம் வேண்டி அந்நியவர்களைத் துணைக்கழைத்தபோதே நீங்கள் யார் என்பது வெளியாகிவிட்டது. முஸ்லிம் சட்டம் முஸ்லிம்களுக்குரியது. அதை அந்நியவர்கள் சொல்வதுபோன்று திருத்தமுடியாது.

சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்கள் நீதிபதிகளாக இருப்பதை சரீஆ தடுக்கவில்லையா? எனக் கேட்கிறார்கள். சாதாரண சட்டத்தில் சரீஆவை நுழைப்பதற்கு இது முஸ்லிம் நாடு இல்லையே! அதற்காக சரீஆவிற்குள் சாதாரண சட்டத்தை நுழைக்கச் சொல்கிறீர்களா?

சில முஸ்லிம் நாடுகளில் பெண்கள் நீதிபதியாக இருக்கிறார்களே! அடுத்த கேள்வி: பதில். முஸ்லிம் நாட்டைப் பின்பற்றுவதா? இஸ்லாத்தைப் பின்பற்றுவதா? முஸ்லிம் நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய ஆட்சியா நடைபெறுகின்றது?

சவூதியில் நேற்றுவரை சினிமாக் கொட்டகை ஹறாம். இன்று ஹலால். இதில் எது இஸ்லாம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு!!!

சரீஆ வைச் சொல்வதற்கு தகுதியானவர்கள் உலமாக்கள் மட்டுமே! எனவே உலமாசபையின் நிலைப்பாட்டோடு நில்லுங்கள்.

உலமாக்களே தகுதியானவரகள்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பெண்காதி நியமனத்திற்கு உடன்பட்டிருப்பதாக ஒரு ஆங்கிலப்பத்திரிகை தெரிவித்திருந்தது . இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றை ஏற்றுக்கொள்ளுகின்ற உரிமை உங்களுக்கு இல்லை. இஸ்லாத்தை சூறையாட அனுமதிக்க முடியாது. உலமாக்களே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கத் தகுதியானவர்கள்.

இயக்கரீதியாக பிரிந்து நிற்கும் உலமாக்களே இவ்விடயத்தில் ஒத்த கருத்தில் இருக்கின்றார்கள். எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இஸ்லாத்தைக் காட்டிக்கொடுத்துவிடாதீர்கள். உலமாக்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

அடுத்த பாகத்தில் திருமணவயது தொடர்பாக பார்ப்போம்.

( தொடரும் )
முஸ்லிம் தனியார் சட்டம் - பாகம் 1 பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு முஸ்லிம் தனியார் சட்டம் - பாகம் 1 பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு Reviewed by Vanni Express News on 9/28/2018 11:40:00 PM Rating: 5