அஸ்மின் குறிப்பிடாத கருத்தையே வலம்புரி திரிபுபடுத்தியது - மாகாணசபையில் கருத்துரைப்பு

-என்.எம். அப்துல்லாஹ்  

130வது அமர்விலே “முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது” என்று அல்லது அதற்கு ஒத்த கருத்தொன்றினை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உறுப்பினர் கௌரவ அஸ்மின் அவர்கள் குறிப்பிடவில்லை என இன்றைய 131வது வடக்கு மாகாணசபை அமர்விலே அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சீ.தவராசா மற்றும் கௌரவ உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரால் கருத்துரைக்கப்பட்டது. 

இன்று வடக்கு மாகாணசபையின் 131வது அமர்வு (11-09-2018) அன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பேரவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ யாஸீன் ஜனோபர் அவர்களினால் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் குறிப்பிட்டதாக 01-09-2018 அன்று வெளிவந்த செய்தி தொடர்பில் கேள்வியொன்றினை எழுப்பினார்; அதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே.சிவஞானம் அவர்கள். மேற்படி விடயம் தொடர்பில் கௌரவ உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் கண்டனத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை விடுத்தார்;

மேற்படி விடயம் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதோ அல்லது தமிழ் அரசியல் தலைவர்களினதோ நிலைப்பாடோ, கூற்றோ அல்ல; மாறாக பலராலும் பெரிதாக அறியப்படாத ஒரு சிறு ஊடக நிறுவனத்தின் செயற்பாடாகும், இதனை அவையில் பேசுபொருளாக்கி, விவாதமாக்குவதைவிடவும், குறித்த நிறுவனத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தொடருவதே சிறப்பானது; என தான் ஆலோசனை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். 

இருந்தபோதிலும் மேலே குறிப்பிட்டதுபோன்று கௌரவ உறுப்பினர் அஸ்மின் அவர்களது கருத்து அல்லாத ஒன்றை ஊடக நிறுவனம் திரிபுபடுத்தியே செய்தி வெளியிட்டது என்பதை நான் தெளிவாகத் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
அஸ்மின் குறிப்பிடாத கருத்தையே வலம்புரி திரிபுபடுத்தியது - மாகாணசபையில் கருத்துரைப்பு அஸ்மின் குறிப்பிடாத கருத்தையே வலம்புரி திரிபுபடுத்தியது - மாகாணசபையில் கருத்துரைப்பு Reviewed by Vanni Express News on 9/14/2018 05:25:00 PM Rating: 5