ஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமை பறிப்பு

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். 

பங்காளதேஷ் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

இராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்காளதேஷிற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். 

மியான்மரில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளின் மீது கடந்த 25-8-2017 அன்று ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான இராணுவ வேட்டை தீவிரமானது. 

மியான்மரில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான பங்காளதேஷில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் திட்டமிட்ட இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதே கருத்தை கனடா உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளும் குறிப்பிட்டிருந்தன. 

இந்நிலையில், இவ்விவகாரத்தில் தலையிட தவறியதற்காக மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி-க்கு கடந்த 2007 ஆம் ஆண்டு கனடா அளித்த கௌரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் நேற்று கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு முன்னர் போராடி பல ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த ஆங் சான் சூகி, திபெத் நாட்டை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப் சாய், தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கப் போராளி நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு கனடா நாடு கவுரவ குடியுரிமை அளித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
ஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமை பறிப்பு ஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமை பறிப்பு Reviewed by Vanni Express News on 9/28/2018 11:01:00 PM Rating: 5