கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான வேலைத்திட்டங்களை கைவிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

-நன்றி ஆதவன்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து புத்தளம் அருவாக்காட்டுப் பகுதியில் கொட்டுவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை உடனடியாக கைவிடுமாறு கோரி இன்று(ஞாயிற்றுக்கிழமை) புத்தளம் கரைத்தீவு சேரக்குளி பிரதேசத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைத்தீவு, 16 ஏக்கர், செட்டி சேன, சேராக்குளி, கல்லடி, ஆலவில்லு, எருக்கலவில்லு, சின்ன நாகவில், சேல்வத்த உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மூவின மக்களும் ஒன்றினைந்து குறித்த எதிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கரைத்தீவு மஸ்ஜிதுன் நூர் பெரிய பள்ளிவாசல் மற்றும் சேராக்குளி கிறிஸ்தவ தேவாலயம் என்பனவற்றின் ஏற்பாட்டிலும் இளைஞர், மாதர் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

கரைத்தீவு சேராக்குளி பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது குப்பைகளை கொட்டுவதற்கு சீன ஒப்பந்த நிறுவனத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்தளம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வேலைத்தளத்திற்கு அருகில் சுமார் ஒரு மணி நேரம் வரை பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன ஒப்பந்த நிறுவனத்திற்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

கொழும்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரை மார்க்கமாக கொண்டு வந்து புத்தளம் கரைத்தீவு சேராக்குளி பகுதியில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.

தமக்கும், தமது பிரதேசத்திற்கும் இந்த நல்லாட்சி அரசு நல்லது செய்யாது போனாலும், தமக்கும் தமது எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கடும் கோஷங்களை எழுப்பிய போது குப்பைகளை கொட்டும் பகுதியில் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பேருந்து ஒன்றின் மூலம் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கடமையிலிருந்த உயரதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டனர்.

எனினும், பல மணி நேரமாகியும் குறித்த அதிகாரிகள் வருகை தராதமையினால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து ஒப்பந்தக்காரர்களின் அலுவலகம் வரை மீண்டும் கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியாக முன்னோக்கிச் சென்றனர்.

இதன்போது, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.

பொலிஸாருடனும், அதிகாரிகளுடனும் கலந்துரையாடுவதாகவும் அவர் ௯றினார்.

இதேவேளை, புத்தளம், கரைத்தீவு பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளிலும் கருப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான வேலைத்திட்டங்களை கைவிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான வேலைத்திட்டங்களை கைவிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் Reviewed by Vanni Express News on 9/09/2018 11:04:00 PM Rating: 5