கட்சி பார்த்து வீடுகள் கட்டிக் கொடுக்கவில்லை - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

-க.கிஷாந்தன்

நான் மலையக சமூகத்தின் விடிவுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றேன். அந்த வேலைத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. 

ஒரு அங்குல நிலம் கூட கொடுக்காத தோட்டத்தொழிலாளிக்கு 7 பேர்ச்சர்ஸ் காணியுடன் சொந்த தனிவீட்டில் வாழக்கூடிய சந்தர்ப்பத்தினை இந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதற்கு நாம் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். 

ஆனால் நான் என்னதான் வேலை செய்தாலும் தேர்தல் காலங்களில் சோற்றுப்பார்சலையும் சாராயத்தையும் காட்டி மக்களை ஏமாற்றி விடுகிறார்கள். சோற்றுப்பார்சலுக்கும் சாராயத்துக்கும் சமூகத்தை மாற்றமுடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் ஒன்பதரை இலட்சம் ரூபாவும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஒருவீட்டிற்கு இரண்டரை இலட்சம் ரூபா செலவிலும் மொத்தம் ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள என்பீல்ட் தோட்டத்தில் ரூபாக்கொலை பிரிவில் 50 வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள். நான் கட்சிப்பார்த்துதான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளேன் என்று. ஆனால் இன்று இங்கு வந்துள்ள ஏனைய கட்சிக்காரர்களுக்கு தெரியும் நான் அவ்வாறு செய்யவில்லை என்று. இதேநேரம் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் மாதம் நிறைவுபெறவுள்ளது.

இதிலும் தொழிற்சங்கங்கள் கம்பனிகள் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றதான் போகிறார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. தோட்டத்தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்காக கம்பனிகளுக்கு கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் 23ம் திகதி நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்கள் அனைத்தையும் மறந்து அணிதிரள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கிய 40 பஸ்கள் என்ன நடந்தது தொடர்பாக விசாரணை செய்யுமாறு இந்திய உதவி தூதுவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ராம், இந்திய கண்டி இந்திய தூதுவராலயத்தின் உதவி தூதுவர் திரேந்திரசிங் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்சி பார்த்து வீடுகள் கட்டிக் கொடுக்கவில்லை - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு கட்சி பார்த்து வீடுகள் கட்டிக் கொடுக்கவில்லை - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு Reviewed by Vanni Express News on 9/17/2018 04:15:00 PM Rating: 5