எமது சமூகத்தில் நேர்மையான அரசியல்வாதிகள் உருவாக வேண்டுமாக இருந்தால்' புத்திஜீவிகள் களத்தில் இறங்க வேண்டும்

-ஒலுவில் ஜெலில்

அரசியல்வாதிகலென்று இன்று வலம் வரக் கூடியவர்கள்' மக்களின் வாக்குகளை கேட்கிறவர்கள் மேடைக்கு மேடை சமூகத்தை நேசிப்பதாகவும் உரிமைக்காக குரல் கொடுப்பதாகவும் அடிக்கடி மார்பு தட்டுகிறார்கள்.

உண்மையில் இவர்கள் சமூகத்தை நேசிக்கிறார்களா அல்லது உரிமைக்காக குரல் கொடுக்கிறார்களா என்று பார்த்தால்' அது வெறும் மேடைப் பேச்சாகவே இருக்கிறதே தவிர" செயல்களில் நடை பெறுவதில்லை என்பதே உண்மை.

இன்று அரசியல்வாதிகள் மலிந்து விட்டார்கள்' அதிலும் எமது முஸ்லிம் சமூகத்தில் ஒருபடி மேல் அதிகமாகவே காணப்படுகிறார்கள். கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் போன்று. யாராவது போட்ட மேடையில் ஏறி நின்று நாலுவார்த்தை தனக்கு பிடித்தவரை புகழ்பாடினாலும் சரியே, அல்லது எதிரணியை வசை பாடினாலும் சரியே அல்லது அந்தந்த பிரதேச மக்களால் வெறுக்கக்கூடியவரை வெளுத்து வாங்கினாலும் சரியே!   அவர் அடுத்த கனமே அரசியல் வாதியாய் அந்த மக்களால் மாலை போட்டு மகுடம் சூட்டி தலையில் வைத்து ஆடுவதை பார்க்கிறோம்.

இப்படி செய்வதன் மூலம் அந்த நேரத்திலிருந்தே அவர்களினாலே அந்த ஊருக்கு சாபக்கேடு  ஆரம்பமாகிறது என்பதை நம்மில் எத்தனைபேர்  அறிந்திருக்கிறோம்? எத்தனை பேர்  சிந்திக்கிறோம்? 

இல்லவே இல்லை ஊரிலுள்ள சிவில் அமைப்புக்கள் ,ஊர் நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து இந்த விடயத்தில் ஆராய்ந்து பார்ப்பதும் இல்லை' உண்மையில் இவர் சமூகத்துக்காக எச்சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்கக் கூடியவரா! இவருடைய எதிர்பார்ப்புகள் சமூகத்தின் உரிமையை வென்றெடுப்பதா?  இல்லை அதிகார ஆசையில் மேடை ஏரியவரா? இவர் மூலம் சமூகத்துக்கோ, ஊருக்கோ நல்லது நடக்குமா? அல்லது அரசியத் தலைவர்களிடம் பதவிக்கும் பணத்துக்கும் சோரம் போய் வாக்கு கொடுத்த மக்களைக் காட்டி வயிறு வளர்க்கக் கூடியவரா என்று? பொதுவாக சிந்தித்து முடிவெடுப்பதை கான முடியவே இல்லை.

மாறாக அவர்கள் பேசும் மேடைப் பேச்சுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையாகி எடுத்த எடுப்பிலே சோடாப் போத்தல் கேஸ் போல் பொங்கி எழுகிறோம்!

அச்சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி சமூகத்தை திசைதிருப்பி, இளைஞர்களை நம்பவைத்து அவர்களுடைய இலக்கை இலகுவாக அடைந்து கொண்டு' ஆதரித்த பாமர மக்களை நடு ரோட்டில் விட்டு விடுகிறார்கள்'  மிஞ்சி மிஞ்சிப் போனால் சில சில்லரை சலுகைகளைக் செய்து கொடுத்து பூசி மொலுகி பெயர் எடுத்துக் கொள்கிறார்கள்.  இதுதான் நமது சமூகத்தின் தற்போதைய அரசியல் நிலையாகும்.

இந்த குறுகிய எண்ணமும், குள்ளநரி புத்தியும் எம்மவர்களிடம் இருந்து மாறாத வரை அல்லது மாற்றப் படாதவரை' எம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கானல்நீராகவே தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதே உண்மை.

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு எந்தளவு உணவு , உடை , மானம், மரியாதை அவசியமோ!  அந்தளவுக்கு மக்கள் ஆட்சியுள்ள ஜனநாயக நாட்டில்' ஒரு சமூகத்தை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அந்தந்த சமூக அரசியல்வாதிகள் முக்கியமே. வேண்டாமென்று எவரும் கூற முடியாது.

ஆனாலும் நாம் தெரிவு செய்கின்ற எமது சமூகம் சார்பாக பிரதிபலிக்கின்ற பிரதிநிதி   "ஆறு கடக்கும் மட்டும்தான் அண்ணன் தம்பி' ஆறு கடந்து விட்டால் நீ யார்" நான் யார்"   என்று கேட்கும் எட்டப்பர்களாகவும், சுயநலவாதியாகவும் இருக்க கூடாது என்பதில் நாம் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

எத்தனையோ படித்த கல்வியாளர்கள், சிவில் அமைப்புக்கள், மார்க்க அறிஞர்கள், சமூக பற்றுள்ள துடிப்பான இளைஞர்கள் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் இருந்து கொண்டு! பலதரப்பட்ட விடயங்களை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறியாமல் இல்லை.

ஆனாலும் அரசியல் என்று வரும்போது மட்டும் இந்த கல்வியாளர்கள், சமூக வாதிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்து கொண்டிருப்பதுதான் வேதனையைத் தருகிறது' இதுவே நாம் விடும் மிகப்பெரிய தவறுமாகும்.

இவ்வாறான சிறிய தவறினால் எமது வருங்கால சந்ததியினர்களையும்' ஏன் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கூட பாதிக்கலாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் காலம் தூரத்தில் இல்லை.

ஆகவே கல்வியளாளர்களின் முயற்சி, அவர்களின் கருத்து (மசூரா), எதிர்கால தூரநோக்கு சிந்தனை, சிறந்த வழிகாட்டல், சரியான தெரிவு என்பன மிகவும் அழகாகவும் உறுதியாகவும் அமைவதன் மூலமே" எமது சமூகத்தில் சிறந்த நேர்மையான மக்களுக்காக உழைக்கக் கூடிய உண்மையான அரசியல்வாதிகளை உருவாக்க முடியும்.

அத்தோடு கல்வியளாளர்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதனால் உங்களுடைய ஒவ்வொரு எட்டுக்களும் மிகவும் சிறப்பான நகர்வுகளாக அமைய வேண்டும்.   மாறாக மக்களின் விடயத்திலும், ஊர் விடயத்திலும், சமூகத்தின் விடயத்திலும் பொடு போக்கோடு தூரத்தில் நின்று செயற்படுவதை சிறிதேனும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சிந்தித்து செயற்படுவோம்! சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்குவோம்.
எமது சமூகத்தில் நேர்மையான அரசியல்வாதிகள் உருவாக வேண்டுமாக இருந்தால்' புத்திஜீவிகள் களத்தில் இறங்க வேண்டும் எமது சமூகத்தில் நேர்மையான அரசியல்வாதிகள் உருவாக வேண்டுமாக இருந்தால்' புத்திஜீவிகள் களத்தில் இறங்க வேண்டும் Reviewed by Vanni Express News on 10/15/2018 04:26:00 PM Rating: 5